குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக, புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக எடுக்கப்படவிருந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முக்கிய பங்காற்றிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு எதிராக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் இரகசியமான தகவல்களை இவர் வெளியிடவில்லை என இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் அரச இரகசிய சட்டத்தின் அடிப்படையில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தகவல்களை வெளியிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கபில ஹெந்தாவிதாரனவிற்கு எதிராக வழக்கு தொடர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.