அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப். வெளிநாட்டினரையும், குடியேற்றவாசிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன். இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளநிலையில் தற்போது இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் திடீரென கரிசனை காட்டத் தொடங்கியுள்ளார்.
நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் நகரில் அமெரிக்காவில் வாழும் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய மக்கள் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்தில் பேசிய டொனாட் டிரம்ப் …
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் இயற்கையான நட்பு நாடாகும். எனது அரசு நிர்வாகத்தின்கீழ் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம். திறந்த வர்த்தகத் தொடர்புகளின் மூலம் இந்தியாவுடன் ஏராளமான வர்த்தகத்தை நடத்தி, இருநாடுகளுக்கும் அபரிமிதமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
கடந்த 19 மாதங்களுக்கு முன்னர் நான் இந்தியாவுக்கு சென்றேன். அடுத்தடுத்து அங்கு செல்ல விரும்புகிறேன். இந்தியாவில் எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு.
இந்து மக்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய விசிறியான நான், அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பன் இருப்பதாக நீங்கள் நினைத்து கொள்ளலாம்.
உங்கள் பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்கான தலைவராக விளங்கிகிறார். வரிவிதிப்புகளை எளிமையாக்கி, வரிகளை நீக்கி ஆண்டுக்கு 7 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியாவை அவர் வழிநடத்தி செல்கிறார்.
இந்திய பொருளாதாரத்தையும், ஆட்சிமுறையையும் சீரமைத்த உங்கள் நாட்டின் பிரதமர் மோடியுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மிக உயர்ந்த மனிதரான அவரை நான் பாராட்டுகிறேன்.
பலதலைமுறைகளாக இந்து மக்களும் அமெரிக்க-இந்தியர்களும் இந்த நாட்டை வலிமைப்படுத்த உழைத்து வருகின்றனர். அழகிய நகரமான மும்பை மீதும், இந்திய பாராளுமன்றத்தின் மீதும் தீவிரவாதிகள் நடத்திய மிகக் கொடூரமானது.
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் இந்தியாவை சேர்ந்த ஒரு உயர்ந்த நண்பரும் (பிரதமர் மோடி) துணையாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். ஒவ்வொரு வீரரோடு வீரராக நாமும் நின்று தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி, வெற்றிபெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.