குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இஸாக் நடியா ரீட்டாவை கண்டியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு 15-10-2016 அன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது வடக்கு கிழக்கில் சிறுபான்மையாக வாழ்கின்ற மலையக மக்கள் அரசியல், அவிருத்தி மற்றும் அடிப்படைத் தேவைகள் வரை தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பாரபட்சங்கள் தொடர்பில் இஸாக் நடியா ரீட்டாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
நாட்டில் 1958,1977,1983 காலப்பகுதிகளில் இடம்பெற்ற இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று வாழ்ந்து வரும் மலையக மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை தாங்கள் எதிர்கொண்ட மற்றும் தற்போது சந்தித்து வருகின்ற பிரச்சினைகள் பற்றி விரிவாக விளக்கியதுடன் அது தொடர்பிலான அறிக்கை ஒன்றினையும் கையளித்துள்ளனர்
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களிற்கான நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் இன்மை, அபிவிருத்திகளில் பாரபட்சம், காணி, மற்றும் காணி ஆவணங்கள், நீர்ப்பாசனம், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலைமைகள்,கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவேறு விடயங்கள் பற்றி ஜக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இஸாக் நடியா ரீட்டாவிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இச் சந்திப்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்பி நடராஜா,ஊடகவியலாளர் மு. தமிழ்செல்வன், சமூக செயற்பாட்டாளர் மணியம் மாஸ்ரர், மலையாளபுரம் தங்கராஜா, மட்டகளப்பு பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி,ஆர் மகேஸ்வரி, வவுனியா வர்த்தக அமைப்பின் பிரதிநிதி எஸ். திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்