குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக் கூடாது என அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள கோதபாய ராஜபக்ஸ தெரிவிக்கையில் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒவ்வொருவரும் செயற்பட்டால் சட்டம் அனைவருக்கும் சமனானதாக அமையாது என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தமக்கு எதிராக குரல் கொடுக்கும் சிவில் அமைப்புக்கள் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எங்கிருந்தன என கேள்வி எழுப்பியுள்ள அவர் சட்டம் அனைத்துப் பிரஜைகளுக்கும் சமனிலையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.