உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கடந்த 6-ந் தேதி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் பாதையில் உள்ள அணைகளில் இருக்கும் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றின் உத்தரவுப்படி மத்திய நிபுணர் குழு கர்நாடகத்திற்கு சென்றது.
அந்தக்குழுவினர் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் பாதையில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்திற்கும் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே நேற்று முதல் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக நீர்ப்பாசன அதிகாரிகள்,
உச்ச நீதிமன்றின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் கடந்த 6-ந் தேதி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 17-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 81.20 அடி நீரே உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் அணையில் 108.77 அடி அளவில் தண்ணீர் இருந்தது. அணையின் முழு கொள்ளளவு 124.80 அடி ஆகும்.
கே.ஆர்.எஸ். அணையில் நீர் இருப்பு குறைந்ததால் நேற்று முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டலு வழியாக ஒகேனக்கல்லுக்கு காவிரியில் அதிக அளவில் நீர் செல்கிறது. இதற்கிடையே காவிரி தொடர்பான வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அப்போது கர்நாடக அரசு காவிரி தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.