குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை விதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி விக்ரமசிங்க பதவி விலகியதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார். தில்ருக்ஸி விக்ரமசிங்க தமது கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறியுள்ளதாகவும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே தில்ருக்ஸி செயற்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதனை கோப்குழு அம்பலப்படுத்த உள்ள நிலையில் தில்ருக்ஸி பதவி விலகியதாகவும் தாம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனை புரிந்து கொண்ட தில்ருக்ஸி இவ்வாறு பதவி விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தில்ருக்ஸி என்ன காரணத்திற்காக பதவி விலகினார் என்பது உறுதிப்படத் தெரியாத போதிலும் ஜனாதிபதியின் உரையின் காரணமாக பதவி விலகியதாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.