காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த உத்தரவு வரும்வரை தினமும் 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகளும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் கள ஆய்வு அறிக்கை குறித்தும் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் ஒக்டோபர் 7 முதல் 18-ஆம் திகதி வரை தமிழகத்துக்கு தினசரி 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த உத்தரவையே அடுத்த உத்தரவு வரும் வரை தொடர வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழகம், கர்நாடகம் இரண்டு மாநிலங்களுக்குமே தண்ணீரின் தேவையை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில மக்களும் வன்முறை, ஆர்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது. காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் குடிமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் குடிமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை நீதிமன்றம் மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் இரு மாநிலத்தவர்களிடயேயும் பரஸ்பரம் மரியாதை காக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தொிவித்துள்ளது.