குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சவூதி அரேபியாவில் அந்நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இளவரசர், நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமைக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Turki bin Saud al-Kabir என்ற இளவரசருக்கு சவூதியின் தலைநகர் ரியாத்தில் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழமையானது என்ற போதிலும் எவ்வாறு இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. குறித்த இளவரசரின் தண்டனையுடன், இந்த ஆண்டில் இதுவரையில் 134 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதியில் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.