உண்ணாவிரதப் போராளியான இரோம் ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதன் அடையாளமாக புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இந்தக் கட்சியின் பெயர் மக்கள் எழுச்சி, நீதிக் கூட்டணியாகும் (People’s Resurgence and Justice Alliance -PRJA).
இம்பால் பிரஸ்கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட இரோம் ஷர்மிளா தேர்தலில் தவ்பல் மற்றும் குராய் ஆகிய தொகுதிகளில் தான் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார். குராய் இவரது சொந்த தொகுதியாகும். தவ்பல் தொகுதி முதல்வர் ஓக்ராம் ஐபோபி சிங் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சமூக ஆர்வலர்களும் தொழில்முனைவோர்களும் உள்ள இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கல்விப்புலத்தைச் சேர்ந்த எரிந்த்ரோ லெய்சோம்பாம் ஆவார். இரோம் ஷர்மிளா இணை-ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி 16 ஆண்டுகளாக தான் கடைபிடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முடித்துக் கொண்ட அவர் தன்னுடைய லட்சியத்திற்காக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார்.
1948-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதிதான் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை முதல் அமர்வு நடைபெற்றது என்பதை குறிக்கும் விதமாக நேற்றைய தினம் இரோம் ஷர்மிளா தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார்.