குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்து இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் பிணை வழங்க முடியாது எனவும், விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும் எனவும் விசேட காரணங்கள் குறித்து நீதிமன்றில் விளக்கம் அளித்தால் அது குறித்து கவனிக்க முடியும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.