குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளது. அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்தே இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அனுராதபுரம், வவுனியா மற்றும் குருணாகல் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தொலைதொடர்பு ஆணையகத்திடமிருந்து 50 மில்லியன் ரூபா பணத்தை இராணுவம் பெற்றுக்கொண்டுள்ளது. இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்தது எனவும் இந்தப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய தினம் காலை 9.30 முதல் பிற்பகல் 2.30 வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்:-
Oct 20, 2016 – 7:45
முன்னாள் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, அவர் இன்று ஆணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இராணுவ வங்கிக் கணக்கில் நிதி வைப்பிலிட்டு மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்னாயக்கா மீதும் ஏற்கனவே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன. எனினும், யுத்தத்தின் போது இராணுவத்தினர் தவறிழைத்ததாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென இவர் தெரிவித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.