குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தேசிய அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமானதும் முக்கியமானதுமாகும் என தெரிவித்துள்ள அவர் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்துவதனால் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக சில நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பாக மனித உரிமை தொடர்பில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீனாவும் முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.