195
மல்லாகம் நீதிமன்ற வீதியில் ஒருவரை வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்த வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என 19 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வாள்வெட்டுச் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்ற வீதியில் நீதிமன்றப் பகுதியில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் 5 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில், சட்டவிரோத கூட்டம் கூடியது, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்தது, ஒருவரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தியது என மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, மூன்று குற்றச்சாட்டுக்களிலும் எதிரிகள் ஐந்து பேரையும் குற்றவாளிகளாகக் கண்ட மல்லாகம் நீதவான், நான்கு குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார். ஒருவர் சம்பவ இடத்தில் காணப்பட்ட போதிலும், அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை என சாட்சியங்களின் மூலம் தெரியவந்ததால், மல்லாகம் நீதவான் அவருக்கு, பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
ஐந்து குற்றவாளிகளும் வாள்வெட்டுச் சம்பவத்தில் காயப்பட்ட நபருக்கு தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதவான் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வழங்கப்பட்டது. கடூழியச்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 4 எதிரிகளும் தண்டனையை அனுபவிப்பதற்காக உடனடியாக சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நான்கு குற்றவாளிகளும், யாழ் மேல் நீதிமன்றத்தில் மல்லாகம் நீதவான் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தனர். இந்த மேன்முறையீட்டு மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, மேன் முறையீட்டாளர்களான குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கப்படாமல், நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது,
மல்லாகம் நீதிமன்றப் பகுதியில் ஒரு நீதிமன்றம் இருக்கின்றது என்பதைக்கூட கவனத்தில் கொள்ளாமல் சட்டவிரோதமாகக் கூடி, வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டமை மிகவும் பாரதூரமான செயலாகும். அதற்கு மலிலாகம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:
இந்த மேன்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றச் செயல் மல்லாகம் நீதிமன்ற வீதியில் நீதிமன்றப் பகுதியில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றம் அருகில் இருக்கின்றதே என்பதைக்கூட கவனத்தில் எடுக்காமல் குற்றச்செயல் புரிந்ததை பாரதூரமான செயலாக இந்த நீதிமன்றம் கருதுகின்றது.
சட்டவிரோதமாகக் கூடி, வாளால் ஒருவரை வெட்டி காயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்ததன் மூலம் எதிரிகளின் குற்ற எண்ணம் வெளிப்பட்டிருக்கின்றது.நீதிதேவதை வாழும் இடமான நீதிமன்றத்தின் முன்னால் குற்றச்செயலைச் செய்பவர்களுக்கு எப்படி கருணை காட்ட முடியும்? தண்டனை வழங்கும்போது, குற்றச் செயல் எங்கு செய்யப்பட்டது என்பதும் முக்கியமாகத் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். குற்றச் செயல் செய்வதென்பது ஒன்று. ஆனால் அதை எங்கே செய்கிறோம் என்பது பெரிய விடயமாகும்.
குற்றச் செயல் புரிபவர்களை விசாரணை செய்யும் இடம் நீதிமன்றம். அங்கு நீதிதேவதை வாழ்கின்றாள். நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. நீதி தேவதைக்குக் கண் தெரியாது என நினைத்து, இந்த எதிரிகள் நீதிமன்ற நீதிபதி தேவதையின் முன்னால் உள்ள வீதியில் பகிரங்கமாகக் குற்றச் செயல்களைப் புரிந்துள்ளமை மன்னிக்க முடியாத செயலாகும்.
இத்தகைய குற்றச் செயல்களுக்கு கருணை இரக்கம் காட்டப்பட்டால் மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை இல்லாமல் போகும். நீதி சரியாகச் செயற்பட வேண்டுமானால், இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு சட்ட வரம்பெல்லையில் அதிகபட்ச தண்டனை எதுவோ அதனை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்தக் குற்றச் செயலுக்கு மல்லாகம் நீதவான் சரியான தண்டனை வழங்கியுள்ளார். அதில் தலையீடு செய்வதற்கு எதுவிதமான காரணமும் மேல் இந்த நீதிமன்றத்தினால் காணப்படவில்லை
மேன் முறையீட்டாளர்கள் மேன் முறையீட்டின் போது, மல்லாகம் மாவட்ட நீதவான் வழங்கிய தீர்ப்பில் என்ன பிழை உள்ளது என்பதை மேல் நீதிமன்றத்தில் எண்பிக்கவில்லை. எண்பிக்கப்படுகின்ற ஒரு குற்றச்சாட்டுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்பட்டால், மொத்தமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் சட்டம் பரிந்துரைக்கின்றது.
எனவே, மல்லாகம் நீதவானால் பிறப்பிக்கப்பட்ட 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையானது, சட்ட வரம்பெல்லையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து 4 குற்றவாளிகளினதும் மேன் முறையீட்டைத் தள்ளுபடி செய்கின்றது என தெரிவித்தார்.
Spread the love