குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் ஏற்பட்ட பாரியளவு நட்டத்திற்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு (கோப்) வில் அங்கம் வகிக்கும் அதிகளவான உறுப்பினர்கள் இந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இந்த மோசடிச் சம்பவத்துடன் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என்ற அடிப்படையில் , கோப் குழுவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். குறித்த அறிக்கை எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதெனினும்இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கோப் குழுவில் மொத்தமாக 14 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் எட்டு உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, லக்ஸ்மன் செனவிரட்ன, சந்திரசிறி கஜதீர, பிரியங்கர ஜயரட்ன, லசந்த அழகியவன்ன, வீரகுமார திஸாநாயக்க, பிமல் ரட்நாயக்க மற்றும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் அர்ஜூன் மகேந்திரனே இந்த நட்டத்திற்கு பொறுப்பு என தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹர்ஸ டி சில்வா, அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஹெக்டர் ஹப்புஹாமி மற்றும் ஹர்சன ராஜகருணாஆகியோர் கோப் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுனில் ஹந்துனெத்தி தலைமையிலான அறிக்கைக்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தனியான கோப்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகிறது.