214
மிக வன்மையாக கண்டிப்பதோடு நீதியான விசாரணை வேண்டும் – மாவை
பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள் மற்றும் பலருடன் பேசிய பின்னர் தெளிவாக அறிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூட்டில்தான் இந்தக் மரணங்கள் சம்பவித்திருக்கிறது என்று. இதன் பின்னர்; இனிமேல் இவ்வாறான் சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்றும் அத்தோடு இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்;டுக்கொண்டனர். இதனை நாம் உடனடியாக திருகோணமலையில் நின்ற ஜனாதிபதியிடம் இதனை தெரிவிக்கும் படி சம்மந்தன் அவர்களிடம் தெரியப்படுத்தினோம் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.அதன் பின்னர் அந்தக் கொலைகார கும்பலில் ஜந்து பொலீஸார் இருந்துள்ளனர் தற்போது அவர்கள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள், அவர்களது வேலையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை நேற்று (வெள்ளி) மாலை பொலீஸ் மா அதிபர் என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.
இந்தச் சம்பவத்தை நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்கின்றோம் அத்தோடு மிக நீதியான விசாணையும் வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாது இருப்பதுதான் எமது மக்களும், மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஜனாதிபதியும் இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.
எனவே இந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இறந்திருப்பது மிகவும் மனவேதனையளிக்கிறது அந்தக் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் அத்தோடு இந்தக் குடும்பத்திற்கு நாமும் உதவிகளை செய்வோம்.
மாவை சேனாதிராஜா
பாராளுமன்ற உறுப்பினா்
பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் அத்துமீறலுக்கு காரணம் – முருகேசு சந்திரகுமார்
இலங்கை பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் இந்த அத்துமீறலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.இந்தச் சட்டம் இலங்கை பொலீஸாருக்கு அதீத அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் விளைவே யாழ் பல்கலைகழகத்தின் இந்த இரண்டு மாணவர்களின் உயிரிழப்பு. இந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும். அதனால் பல தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் உள்ளனர். எந்த ஆட்சி வந்தாலும் இந்தச் சட்டத்தை வைத்து தமிழ் மக்களை ஒடுக்கின்ற நிலைமையே தொடர்கிறது. பொலீஸார் இந்தச் சட்டத்தின் மூலம் பொலீஸார் தாங்கள் நினைத்தப்படி தங்கள் துப்பாக்கியை நீட்ட முடியும் என்ற நிலைமையை மாற்ற வேண்டும்.
இந்த துயரச் சம்வத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சரியான நீதி விரைவாக கிடைக்கவேண்டும்.இனிமேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும்.இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுக்கொள்கின்றது. ஆனால் அதற்கு மாறாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் எக்காலத்திலும் நல்லிணக்கம் மீது நம்பிக்கை ஏற்பாடாது. நல்லாட்சி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து நியாயம் கிடைக்கும் என்று இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழ்மையாக குடும்பத்தில் இருந்து பெரும் நம்பிக்கையோடு பல்கலைகழகம் சென்று தனது மூன்றாவது ஆண்டு கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சம்பவம் வேதனைக்குரியது.எனத் தெரிவித்தார்
முருகேசு சந்திரகுமார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பல்கலைக்கழக மாணவர் மரணம்- இது திட்டமிட்ட கொலை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :
யாழ் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கொடூர சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களை தாம் சுட்டதிற்கான காரணங்களாக பொலிஸார் எதனை குறிப்பிட்டாலும் அக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியாது எனத் தெரிவித்த அவர் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிலில் சென்று குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டனர் என்பது இதில் இருந்து உறுதியாக தெரிய வருகிறது என்று 4றிய அவர் இந்த விடையத்தினை மூடி மறைப்பதற்கான பல செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்விடயத்தில் சட்டத்தினையும், நீதியினையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீதவான் இவ்விடயங்கள் தொடர்பாக அவதானிக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்க கரிசனையுடன் செயற்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்துடைப்பு விசாரணையன்றி துரித விசாரணை நடாத்தப்பட வேண்டும் – வடக்கு மாகாண பதில் முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் கூட்டு அறிக்கை
குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா கூட்டாக வலியுறுத்து.
அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக் கிழமை (20.10.2016) நள்ளிரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதே வேளை குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதே வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் வன்முறை, செயற்பாடுகளில் ஈடுபடாது துரித நீதி பெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவோ, எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது. இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆதலினால், இவ் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று கோருகின்றோம்.
அம் மாணவர்களின் இழப்பினால் தாங்கொணாத் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடக்குமாகாணசபை, அரசியற் பேதமில்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதனை எடுத்துக் காட்டவே.
ஒப்பம்
த. குருகுலராசா சி.தவராசா
பதில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்,
வடக்கு மாகாணசபை வடக்கு மாகாண சபை.
Spread the love