குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். துப்பாக்கி;ச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக மிகவும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முன்னதாக முழுமையான விசாரணை நடத்திசரியான உண்மைகளை கண்டறிந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வாகனத்தைச் நிறுத்தச் சொன்னால் தாமும் அவ்வாறு வாகனத்தை நிறுத்துவதாகவும் காவல்துறையினருக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரோத உணர்வில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும், கடமைகளை செய்யும் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் துரித கதியில் காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமை அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண காவல்துறையினர் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.