202
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் அரசறிவியல்துறை மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 21ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிலையில் கட்டளையின் பிரகாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்வி எழுப்புதலின்போது, மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் நடந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பதற்றமான சூழ் நிலையிலிருந்து, நிம்மதி இழந்து வாழ்ந்துவந்த மக்கள் தற்போது அமைதியானதொரு வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது ஆரோக்கியமானதல்ல என்று நான் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.
அந்த வகையில் எமது சமூகத்தை மீண்டும் வன்முறையை நோக்கிச் செல்ல தூண்டாத வகையில் சட்டமும், ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நானிங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் கூறிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி சம்பவம் தொடர்பில் உண்மை நிலை என்ன? என்பதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அறியத்தர முடியுமா? என்றும், யாழ். குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் வன்முறைகளை மேலும் தூண்டாத வகையில் எடுக்கக்கூடிய சாத்தியங்கள் எவை என்பது தொடர்பில் விளக்கமளிக்க முடியுமா? என்றும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மேலும் தொடராதிருக்கும் வகையில் உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தனது கேள்விகளுக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் உரிய பதிலை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன் என்று தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, ஆரம்ப காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையே நினைவு படுத்துகின்றது. எனவே அந்த கசப்பான அனுபவங்களுக்கு இடமளிக்காதவகையில் மாணவர்களிளின் கொலைகள் தொடர்பில் வெளிப்படையானதும், உண்மையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதே எமது மக்களின் கோரிக்கையாகும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
Spread the love