இந்தியாவின் மணிப்பூர் மாநில முதலமைச்சர் இபோபி மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனினும்; தெய்வாதீனமாக எதுவித பாதிப்புகளுமின்ற அவர் தப்பியுள்ளார். மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில்இன்று மாவட்ட தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இபோபி , உக்ருல் நகருக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கிய போதே அவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் இபோபி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நாகா தீவிரவாதிகள் மணிப்பூரில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.