Home இலங்கை அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டு இருக்கும் பெற்ற வயிறுகளுடன் கஜனின், சுலக்ஷனின் அம்மாக்களின் வயிறுகளிலும் தீ பரவிக் கொண்டது – நடராஜா குருபரன்:-

அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டு இருக்கும் பெற்ற வயிறுகளுடன் கஜனின், சுலக்ஷனின் அம்மாக்களின் வயிறுகளிலும் தீ பரவிக் கொண்டது – நடராஜா குருபரன்:-

by editortamil

யுத்தம் காவுகொண்ட தமிழ்ப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் கல்விக் கனவில் மிதந்த, நடராஜா கஜன்,  மற்றும் பவன்ராஜ் சுலக்ஷனும் துப்பாக்கிச் சன்னத்தில் மாண்டு போனார்கள். மோட்டார் உந்துருளி விபத்தாக இறுதியாக்கப்பட்ட மரணங்களை, வைத்தியசாலைப் பிரேத பரிசோதனை  படுகொலைகளாக நிறுவிச் சென்றுவிட்டன.. பெற்றாரும், உடன்பிறப்புகளும், சுற்றத்தாரும், பல்கலைத் தோழர்களும் துவண்டு போயினர்… கஜனும், சுலக்க்ஷனும் வாழ்ந்த, தவழ்ந்த, உலாவித்திரிந்த கிளிநொச்சி பாரதிபுரம், யாழ் கந்தரோடை, அளவெட்டிப் பகுதிகளை துயரம் சூழ்ந்திருக்கிறன…..

இந்தத் துயரங்களையும், காலம் காலமாய் எதிர் கொள்ளும் அவலங்களையும், தமிழ் மக்களின் இயலாமையையும், துப்பாக்கிகளும், அவற்றின் சன்னங்களும், அவற்றைத் தாங்கிச் செல்லும், கல்நெஞ்சர்களும் அறியப்போவதில்லை… அறிந்தால்….

போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும்  செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் என கஜனின் தயாரிடம் காவல்துறையினர் கேட்பார்களா?

1958களில் இருந்து எத்தனை தடவைகள் நீங்கள் எங்களிடம் என்னிப்புக் கேட்கிறீர்கள் என அந்தத் தாயார் பொலிசாரிடம் கேட்கவில்லை… மன்னிப்பதாலோ, மன்னிக்காமல் விடுவதாலோ கஜன் இனி தன்னை அம்மா என்று அழைக்கப் போவதில்லை என்பதனை அந்தப் பெற்றெடுத்த மனம் உணராமல் இல்லை…

அந்தத் தாய் கூறுகிறார், “யாழ்ப்பாணம்  வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாருவராக  காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.  அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

அங்கு வைத்து காவல்துறையினர்  எங்களிடம் கூறினார்கள், இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. தவறுதலாக நடந்துவிட்டது.  காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.

சம்மந்தப்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றார்கள்,  அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும்  தந்து எல்லா செலவையும் செய்யவார்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னார்கள்

நாங்கள் செய்த குற்றத்திற்காவா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும்,  அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள்  செய்யிறம் என்றும் சொன்னார்கள்ள்.  ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை  காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்

பிறகு  கொழும்பிலிருந்து  காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னார். உங்கட பிள்ளைகள் ஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம்.  உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம், மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றார்கள்” என சொல்கிறார்  யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன்  நடராசா கஜனின் தாயார் நடராசா சறோஜினி.

கேட்பாரின்றி சுட்டுக் கொல்வதும், பின்னர் பந்தல்போட்டு, சோடா, பிஸ்கற்கொடுத்து கூடவே, போஸ்மோட்டச் செலவு, பெட்டிச்செலவு, வாகனச் செலவு என ஒட்டுமொத்த செலவுகளையும் கொடுத்து விட்டால் அந்த பெற்ற வயிறு திருப்த்திகொள்ளுமா?

தமிழ் மக்களின் உயிர்களும், உணர்வுகளும், பந்தல் போட்டு –  சோடாவும், பிஸ்கற்றும் கொடுத்து, பெட்டிச் செலவோடு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தகனமும் நல்லடக்கமும் செய்வதுடன் முற்றுப்பெற்று விடுமா?

“எங்கள் பல்கலை மாணவன் கஜனின் கொலையை கண்டித்து, கண்டன ஆா்ப்பாட்டம் நடாத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம்…. ஆனால் காவல்துறை உயா் மட்ட அழுத்தம் எங்களின் மன அழுத்தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை”… என குமுறுகின்றனர் கிளிநொச்சி வாழ்  பொதுமக்கள்…

நேற்று சனிக் கிழமை பதினொரு மணியளவில்,  கொலை செய்யப்பட்ட மாணவன், நடராஜா கஜனின் இல்லத்தில் இருந்து இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தை  ஆரம்பித்து,  கிளிநொச்சி பிரதி காவல்துறை   மா அதிபா் அலுவலகம் வரை சென்று  அங்கு மகஜா் ஒன்றும் கையளிப்பது என பாரதிபுரம் பிரதேச பொது மக்களாகிய நாங்கள் திட்டமிடப்பட்டிருந்தோம். ஆனால்  கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக ஆா்ப்பாட்டத்தை கைவிட்டோம்.

காரணம் அந்தக் குடும்பத்தினருடன் காவல்துறை உயா் மட்டத்தினா் தொடா்பு கொண்டு பேசியதன் பின்னரே அவா்கள் ஆா்ப்பாட்டத்தை விரும்பவில்லை.  உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காவற்துறையிடம் இருந்து அழுத்தம் பிரயோகிப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.” என்கின்றனர் பிரதேச மக்கள்.

எங்கள் பிரதேச மாணவர்களின் உயிர் அனியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த மாணவா்களுக்கு நீதி கோரியும், குற்றவாளிகள் விரைவாக நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே,  நாம் இந்த  ஆா்ப்பாட்டத்தை செய்வதற்கு இருந்தோம்… ஆனால் எங்கள் உள்ளக் குமுறல்களைக் கூட வெளிப்படுத்த முடியாத நல்லிணக்க அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம்” என தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றனர் மக்கள்…

இன்று ஞாயிற்று கிழமை, கஜனின் உடல் கிளிநொச்சி  பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து  எடுத்துச் செல்லப்பட்டு பெரும் திரளானவா்களின் கண்ணீருடன், இரணைமடு பொது மயானத்தில்  அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

 

காலை பத்து மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று  திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான குருகுலராஜா  இரங்கல் உரையாற்றிக் கொண்டிருந்த போது, கடும் எதிர்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்துவிட்டனா். ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறு கூச்சலிட்டனா். கஜனின் இறுதி நிகழ்வில் சற்று அமைதியின்மை நிலவியது.

அங்கு அரசியல் வாதிகள் எவரையும்  உரையாற்றக் கூடாது என பல்கலைகழக மாணவா்கள் கண்டிப்புடன் கூறிவிட்டனர். அங்கு சமூகம் அளித்திருந்த, பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரும், ஏற்பாட்டாளா்களால், பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வை முடித்துக்கொண்டார்கள் பல்கலை மாணவர்கள்..

இன்று பவன்ராஜ் சுலக்ஷனும் மண்ணுடன் அடங்கப் போனான்… அவனது பெற்றோரும் உடன்பிறப்புகளும், உற்றாரும் உறவினரும் சுற்றத்தாரும் நாளைapd; பின் அவனது உயிரற்ற உடலையும் காணப்போவதில்லை.

இரண்டு உயிர்கள் மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டன.. மீண்டும் இரண்டு உடல்கள் புதைக்கப்படுகின்றன.. உடல்கள் “புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றன” என்ற வரிகளின் சொந்தக்காரர்களும் புதைந்து போனார்கள்.. அவர்களுடன் அந்த வரிகளும் சேர்ந்தே புதைந்து போயின…

இனி உயிர்கள் பறிக்கப்படும் போதும் உடல்கள் புதைக்கப்படும் போதும், நிகழ்வது போன்று, வழமைபோல் ஜனாதிபதி அணைக்குழுக்கள் உருவாக்கப்படும். விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பப்படும். விசாரணைகள் முற்றுப்பெறாமல் இழுத்தடிக்கப்படும். பறிக்கப்பட்ட உயிர்களுக்காக பணமும், சலுகைகளும் பேரம் பேசப்படும். எங்கள் தமிழ்த் தலைவர்களின் ரத்த நாளங்கள் புடைத்தெழ அனல்பறக்கும் அறிக்கைகள் ஊடகங்களை நிரப்பிச் செல்லும்…. உறுதிமொழிகள் வழங்கப்படும்.. தமிழகத் தலைவர்களின் தூள்பறக்கும் அறிக்கைகளும், தமிழக அமைப்புகளின் மெழுகுவர்த்திப்ப் போராட்டங்களும், தூதரக முற்றுகைப் போராட்டங்களும் வெளிக்கிழம்பும்… புலம்பெயர் தேசங்களில் உணர்ச்சிப் பிழம்புகள் கிளர்ந்தெழுவார்கள்… ஓரிரு வருடங்கள் நினைவுநாட்கள் வந்து போகும்.. சமூக வலைத்தளங்களும் முட்டி மோதிச் செல்லும்…

அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டு இருக்கும் பெற்ற வயிறுகளுடன்  கஜனின், சுலக்ஷனின் அம்மாக்களின் வயிறுகளிலும் தீ பரவிக் கொண்டது……

 

 

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva October 27, 2016 - 8:42 am

<<>> நடராஜா குருபரன்.

பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தரப்பினர் தமது பங்குக்கு எதிர்காலத்தில்(மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 வருடங்களுக்கு) என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் கட்டுரையாளர் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். எமது TNA அரசியல்வாதிகளால் இதற்கும் மேல் மிக அதிகமாக எவ்வளவோ செய்ய முடியும்? ஆனால் எதையும் செய்யப் போவதில்லை! எஜமான விசுவாசம் எதையும் செய்ய விடாதே?

இக் கட்டுரையானது GTN ன் சிங்கள பதிப்பிலும் வந்திருக்கின்றதோ தெரியவில்லை? அப்படியே வந்திருந்தாலும், ஒரு சிங்களத் தினசரியைப் பார்க்கின்ற அளவுக்கு அது சிங்கள மக்கள் மத்தியில் தேடப்படுமென்பதும், சந்தேகமே!

எனது கவலையெல்லாம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவுக்காவது இக் கட்டுரையின் சாராம்சம் சென்றடைய வேண்டுமென்பதே? ஆவாக் குழு என்று போலீசார் சந்தேகப்படார்கள் என்றும், வானத்தை நோக்கியே சுட்டார்கள் என்றும் கூறும் அவருக்கு, இறந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் யாழ் போலீஸ் தரப்புக் கதைத்த பேரங்களாவது தெரிய வேண்டுமே? சுட்ட போலீசார் போதையில் இருந்திருப்பார்கள், என்று கூடக் கூறியிருக்கின்றார்கள்?

சம்பவ இடத்தில் யாழ்/ போலீசார் இரவிரவாகச் சல்லடை போட்டுத் தேடியும் கிடைக்காத வெற்றுத் துப்பாக்கி ரவை/ ரவைக்கு கூடு, விஷேட புலனாய்வார் கைகளுக்குக் கிடைத்திருக்கின்றதாம்? நம்பும்படியாகவா உள்ளது? ‘இந்த வகையான துப்பாக்கி ரவை பொலிஸாரின் துப்பாக்கிக்கு உரியதல்ல’, என்று ஒரு புதுக் கதையை நாளை அவர்கள் கூறினாலும் ஆச்சரியமில்லை? ‘புதிதாக யாரோ இடையில் புகுந்து சுட்டிருக்கலாம்’, என்று சினிமாப் பாணியில் கூறுவார்களோ? எல்லாவற்றுக்கும் மேலாக, மறித்த போலீசாரை வண்டியால் இடிக்க வந்தபோது தற்காப்புக்காகப் அவர்கள் சுட்டிருக்கலாமென்றும் அடிமுட்டாள் அமைச்சர் கூறியிருக்கின்றார்? இவற்றை ஆரம்பத்திலேயே போலீசார் சொல்லியிருக்கலாமே? எதற்காக விபத்தாகச் சோடிக்க முனைய வேண்டும்?

நாளாந்தம் புதுப் புதுக் கதைகள் கூறும் போலீசார், வண்டியைச் செலுத்திய மாணவன் சூடு பட்டமைக்கான காரணத்தை, ‘முதல் சோதனைச் சாவடியில் தடுத்தும் நிற்காததால், அடுத்த சோதனைச் சாவடிப் போலீசாரே அவர்களைச் சுட்டார்கள்’, என்று கூறித் தம்மை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கின்றார்கள்? தலையில் குண்டடிபட்டும், தலைக் கவசம் சேதமாகாமைக்கான காரணத்தை எப்படி நியாயப்படுத்துவார்களோ?

ஆக, ஒரு உண்மையை மறைக்கப் பல பொய்களை சொல்லித் தமிழரை ஏமாற்றும், ‘கையாலாகாத ஆட்சியாளர்கள்’, மறுபுறத்தே திட்டமிட்டுச் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முயலும் எதிர் கட்சிக் கூட்டணியினரிடம் தோற்கப் போகின்றார்கள், என்பதே உண்மை! நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது!

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More