குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். நகைச்சுவை பேசும் காலமல்ல இது எனவும், ஆட்சியை நடத்த முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தில் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹாவா என்றவொரு குழு உரிமை கோரியிருந்தது எனவும், இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையாக பாராளுமன்றில் கூறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியிலும் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் ஹர்த்தால் நடத்திய சிலர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு சிறு சிறு அலகுகளாக சிறு சிறு குழுக்களாகவே வியாபித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் எனக்கூறிக் கொண்டு அரசாங்கம் நகைச்சுவை செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர் வற் வரி அதிகரிப்பினை விடவும் வடக்கு பிரச்சினை ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.