குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து யார் அடுத்த பிரதி அவைத்தலைவர் எனும் சர்ச்சை சபையில் உருவானது. முதலமைச்சர் தான் வெளிநாட்டில் இருப்பதனால் , தான் சபைக்கு வந்த பின்னர் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யலாம் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்து இருந்தார்.
அதனால் முதலமைச்சர் வந்த பின்னர் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யலாம் என ஒரு தரப்பும் இல்லை இன்றைக்கே தெரிவு செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பும் விவாதித்தது. சுமார் 2 மணி நேர விவாதத்தின் பின்னர் மதியம் 12 மணியளவில் தேர்தல் வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களான க.வ.கமலேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் பெயர்கள் உறுப்பினர்களால் முன் மொழியப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் போது 32 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 18 வாக்குகளை பெற்று க.வ.கமேலேஸ்வரன் பெற்று புதிய பிரதி அவைத்தலைவராக தெரிவானர். மற்றைய வேட்பாளரான அனந்தி சசிதரன் 13 வாக்குகளை பெற்றார். ஒரு வாக்கு நடுநிலமையாக அளிக்கப்பட்டது.