நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 190 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்தியா சென்றுள்ள நியூஸிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.
நேற்றைய தினம் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இந்திய அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான ரோகித் சர்மா 70 ஓட்டங்களைப் பெற்று ஆரம்பித்து வைக்க அதன் பின்னர், களமிறங்கிய டோனி 41 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுவூட்டினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்கைளப் பெற்றது. 270 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இறுதியில், 23.1 ஓவர்களில் 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை சந்தித்தது. . 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அமித் மிஸ்ராஇந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் 190 ஓட்ட வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியுள்ளது.