சுங்க வரிகளில் 99 சதவீதத்தை நீக்குகிற, இன்னும் 12 பில்லியன் (ஆயிரத்து 200 கோடி) டொலர் அளவுக்கு வர்த்தகத்தை அதிகரிப்பதாக நம்பப்படும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் கையெழுத்திட்டுள்ளன.
பெல்ஜியத்தின் வலோனிய பிராந்தியத்தின் எதிர்ப்புகளுக்கு , இறுதியில் தீர்வு கண்ட பின்னர், பேரம் பேசுவதற்கு ஏழு ஆண்டுகள் பிடித்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஆணைத்தின் தலைவர் ஜாங் குளோடு யுங்கர் உள்பட அந்த அமைப்பின் தலைவர்கள் மூவரோடு, திட்டமிட்டதைவிட தாமதமாக பிரஸல்ஸில் நடைபெற்றுள்ள இந்த கையெழுத்திடும் நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.
பிறரால் பின்பற்றப்படும் அளவிற்கு இந்த ஒப்பந்தம் பன்னாட்டு தரத்தை கொண்டுள்ளதாக ஜாங் குளோடு யுங்கர் இது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். பொருட்களுக்கான சுங்க வரிகளில் 99 சதவீத வரிகளை இந்த சி இ டி ஏ ஒப்பந்தம் நீக்குகிறது. ஆண்டுக்கு மேலும் 12 பில்லியன் (ஆயிரத்து 200 கோடி) டொலர் அளவுக்கு வர்த்தகத்தை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்காக விமானம் திரும்பி சென்றதை அடுத்து பிரதமர் ட்ரூடோவின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு தாமதமாகியது.
பிபிசி