குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஸ் கிரிக்கட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணி;க்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
ஸ்கோர் விபரம்:
முதல் இன்னிங்ஸில் பங்களாதேஸ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் தமீம் இக்பால் 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஜோ ருட் 56 ஓட்டங்களையும், கிறிஸ் வோகஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் இம்ருல் கயிஸ் 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போதிலும், சகல விக்கட்டுகளையும இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் பங்களாதேஸ் அணியின் ஹசன் மிராஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் மிராஸ் தெரிவு செய்யப்பட்டார். ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்தப் போட்டித் தொடரை பங்களாதேஸ் சமன் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.