இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் சில இடங்களில் மழை வீழ்ச்சி தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தொடர் மழை வீழச்சி காணப்படுகிறது. எனினும் வன்னிப் பிரதேசத்தில் கடுமையான வரட்சி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வரட்சிக்குபோன்ற தொரு நிலமையே மீண்டும் ஏற்பட்டுள்ளது. வானம் பார்த்தபடி இருக்கின்றனர் வன்னி விவசாயிகள்.
இதனால் மக்கள் குடிநீருக்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலிய மாவட்டங்கள் இயல்பிலேயே வெப்பம் கூடிய மாவட்டங்கள். இந்த நிலையில் வரட்சி காரணமாக வெப்ப அதிகரிப்பால் பலரும் நீர் வரட்சியுடன் தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை குளங்கள் வற்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றன. கால்நடைகள் தண்ணீர் இன்றி தாகத்தில் தவிப்பதுடன் புற்தரைகள் கருகிய நிலையில் அவை பசியில் அலைகின்றன.
கிளிநொச்சிக் குளத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளத்தின் நீர் அடிநிலைக்குச் சென்றுள்ளது. இன்னும் சில நாட்கள் வரட்சி நீடித்தால் குளம் முற்றாக வற்றிவிடும் அபாயம் உள்ளது. மழையின்றி நிலம் வறண்டுபோனதன் காரணமாக நீண்ட காலத்து பயன்தரு மரங்கள் பட்டுப் போயுள்ளன. வட்டக்கச்சி போன்ற பகுதிகளில் தென்னை மரங்கள் வாடிக் காணப்படுகின்றன. அக்கராயன், அமைதிபுரம், பொன்னகர், சாந்தபுரம், மணியங்குளம், எட்டாங்கட்டை போன்ற பகுதிகள் வரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வரட்சி காரணமாக பண்ணையாளர்களின் பால் விற்பனை பாதித்துள்ளது. மாடுகளுக்கு ஒழுங்கான வகையில் நீர் மற்றும் புல் ஆகாரமின்றி அவற்றின் பால் உற்பத்தி வீழச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் சிறியளவு மழை வீழ்ச்சி கிடைத்தது. இதனைக் கண்டு மகிழச்சியுற்ற விவசாயிகள் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான விதைப்பில் ஈடுபட்டார்கள். விதைப்பு செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்துள்ளபோதும் தொடர்ந்து மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை.
இதனால் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் வன்னி விவசாயிகள். விதைப்பு நடைபெற்று ஒரு வாரத்தின் பின்னர் பயிர் ஆகியுள்ள நெற் பயிருக்கு மழை வீழ்ச்சி கிடைக்குமா இல்லை அவை வெம்மையில் கருகுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்யாதவிடத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகும் என்றும் கூறப்படுகிறது.
வன்னியில் கடந்த பல நாட்களாக மழை பெய்யும் அறிகுறி தென்பட்டபோதும் மழை பெய்யவில்லை. வானம் இருட்டி இடி முழங்கியபோது மழை பெய்யப் போகிறது என்று தினமும் நம்பும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். எப்போது வானம் மழையைப் பொழியும் என்று காத்திருக்கின்றனர் வன்னி விவசாயிகள். ஏற்கனவே மழை கடுமையாக பிந்தியுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பொய்த்தால் அது வன்னிப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை – பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.