தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் 358 கோடி ரூபாய்களுக்கு மதுபான விற்பனை இடம்பெற்றுள்ளதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை அண்மித்த, கடந்த 3 நாட்களில் மட்டும் 358 கோடிக்கு மது வகைகளை வாங்கி டாஸ்மாக் நிறுவனத்திற்கு 358 கோடி ரூபாய் வருமானத்தை தமிழக குடி மக்கள் ஈட்டிக் கொடுத்திருக்கிறார்கள் .
தமிழகம் முழுவதும் 6,200 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக 55 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை மதுபான வகைகள் விற்பனையாகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இது 90 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும். தீபாவளி, புத்தாண்டு போன்ற முக்கியமான பண்டிகை மற்றும் கொண்டாட்ட நாட்களில் மது பிரியர்கள் மதுபான வகைகளை வாங்கி கொண்டாடி மகிழ்ந்து வருவது வழக்கமாகிவிட்டது. இது போல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுப்பிரியர்கள் அதிக அளவில் மதுவகைகளை வாங்கி சென்றுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.