சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடி கட்டிடம் இன்று திட்டமிட்டபடி ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. வெடி மருந்துகளை பயன்படுத்தி கட்டிடத்தின் இடிபாடுகள், கட்டிட இருக்கும் பகுதிகுள்ளே விழும் வகையில் இம்பிளோசன் என்ற அதிநவீன முறையில் கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
கட்டிடம் தகர்க்கப்படும் பகுதியின் அருகே பொதுமக்கள், கால் நடைகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் தூரத்திலுள்ள கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் நின்றபடி கட்டிடம் நொடிப்பொழுதில் இடிந்து விழந்ததை வியப்போடு பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று 11 அடுக்குகளை கொண்டு கம்பீரமாக நின்றிருந்த கட்டடத்தை 10 விநாடிகளில் தரை மட்டமாக்கியுள்ளது.
தமிழகத்திலேயே இதுவரை இடிக்கப்பட்ட கட்டடங்களிலேயே இதுவே மிகப்பெரியது என கூறப்படுகிறது. முதல்முறையாக உயரமான கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டதால் மவுலிவாக்கம் பகுதி மக்கள் அதனை காண திரண்டிருந்த அதேவேளை தனியார் தொலைக்காட்சிகளும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தன.
மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்பட உள்ளது.
Nov 1, 2016 @ 07:19
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்பட உள்ளதனைத் தொடர்ந்து அங்கு உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட இரண்டு, 11 மாடி கட்டிடத்தில் ஒன்று 2014ம் ஆண்டு இடிந்து விழுந்ததில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 27 பேர் காயமடைந்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடிந்து விழாமல் இருந்த மற்றைய 11 மாடிக் கட்டிடத்தை இடிக்குமாறு உத்தவிட்டது. இதனையடுத்து நாளை இந்த 11 மாடி கட்டிடம் வெடி வைத்து இடிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் இடிக்கப்படும் 11 மாடி கட்டிடத்திற்கு அருகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், அவசரகால அம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் உள்ள பகுதியை சுற்றி 100 மீட்டர் தூரத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.