குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கடந்த 2015ம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த காவல்துறை அதிகாரியை கைது செய்து விசாரணை செய்வது குறித்து ஆலோசனை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளனர்.
மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்திருந்தனர் எனவும் இந்த சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து அவரை விடுதலை செய்துள்ளதாகவும், சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு உயர் காவல்துறை அதிகாரி பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் ஆத்திரமுற்ற பொதுமக்கள் நீதிமன்றின் மீது கல் வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் குறித்த சந்தேக நபர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து மீளவும் காவல்துறையினரால் கைது செய்பய்பட்டிருந்தார். சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு கூறிய காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சித்து வருகின்றனர்.