குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாணத்தில் காணப்படும் பிரபல பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவர்களே அதிகளவில் ஹாவா குழுவில் அங்கம் வகிப்பதாக வடக்கில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஹாவா குழு குறித்து விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஹாவா குழுவில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், இவர்களில் அதிகளவானர்கள் பாடசாலை மாணவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஹாவா குழு உறுப்பினர்கள் தொலைபேசி உரையாடல்கள் மூலம் தொடர்பாடுவதில்லை எனவும் வைபர், வட்ஸ்அப் போன்ற நவீன தொடர்பாடல் வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் யாழ்ப்பாணம், சுன்னாகம், கந்தரோடை, மானிப்பாய், கோப்பாய், அச்சுவெலி, தெல்லிப்பழை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சன்னா, தேவா மற்றும் பிரகாஸ் ஆகியோரே இந்தக் குழுவினை வழிநடத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் குழுவினர் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட வாள்களைப் பயன்படுத்துவதுடன் 20 மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.