குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் குறித்த அறிக்கை தருமாறு பிரித்தானிய அமைச்சர் கோரிக்கை
Nov 7, 2016 @ 15:27
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் கணவனை இழந்தோருக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்ற என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராசா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரித்தானிய அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்
Nov 3, 2016 @ 13:02
எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வர உள்ள பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல், மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியன குறித்து வலியுறுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களை அனேலி சந்திக்க உள்ளார் எனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் இந்த விஜயத்தின் போது வலியுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால்நிலை சமத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்த உள்ளார் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.