குளோபல் தமிழ் ஐரோப்பிய செய்தியாளர் ராஜ்
பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற மக்கள் கருத்துக்கணிப்பு தெரிவித்திருந்தாலும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தின் ஒப்புதலும் இதற்கு அவசியம் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
லிஸ்பன் உடன்படிக்கையின் 50வது பிரிவின் கீழ் ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான முன்னறிவிப்பை வழங்குவதற்கு பிரதமர் திரேசா மே தலைமையிலான அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரித்தானியா ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற தரப்பினர் வரவேற்றுள்ள அதேவேளை ஜனநாயகத்துக்கு விரோதமான தீரப்பு என ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானிய அரசுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.