தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீளவும் ஆட்சிப் பீடம் ஏற வேண்டும் என சீனா விரும்புவதாக எகனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் நிதி அமைச்சரை சீனத் தூதுவர் நேரடியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பல தடவைகள் விமர்சனம் செய்தமை வழமைக்கு மாறான ஓர் விடயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை பயன்படுத்தி மூன்று தடவைகள் விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை சீனா விரும்புவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீன தூதுவர்கள் தாங்களாகவே கருத்து வெளியிடுவதில்லை எனவும் அவ்வாறு கருத்து வெளியிட்டால் அது அந்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாடகவே அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தூதுவராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் நடத்திய இரண்டாவது ஊடகவியலாளர் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் உள்விவகாரப் பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் சீன அபிவிருத்தித் திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தூதுவர் யீ ஸியான்லிங் தெரிவித்திருந்தார்.
சீனத்தூதுவரின் ஊடக சந்தப்பு குறித்த வீடியோ காட்சிகளை அதிகாரிகள் திரட்டியுள்ளதாகவும் இது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.