குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் ஒட்டுமொத்த அரசாங்கமே தொடர்பு பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் பல பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அனைத்து மோசடியாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு எதிராக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவோ குற்ற விசாரணைப் பிரிவோ விசாரணை நடத்துவதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஹாவா குழுவினை உருவாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் மக்களை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.