Home இலங்கை ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான் – – அமைச்சர் மனோ கணேசன்:-

ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான் – – அமைச்சர் மனோ கணேசன்:-

by admin

அமைச்சர் ராஜித பற்றியும்முதல்வர் விக்கி பற்றியும் ஆளுநர் ரெஜி குழந்தைத்தனமாக பேசுகிறார்

அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை.  ரெஜினோல்ட் இவை பற்றிய விபரங்களை அறியாமல் குழந்தைத்தனமாக பேசுகிறார் என நினைக்கின்றேன். வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு,  முடுக்கி விட்டவர் கோதாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத வேலையை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. அவை உண்மை. புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘இந்த நொடியில் என் மனதில்’ என்ற தன் முகநூல் பக்க பத்தியில் இன்று காலை அமைச்சர் கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு,  முடுக்கி விட்டவர் கோதாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார்.

அன்று, கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல்-இராணுவ தேவைகளுக்காக அமைத்து, கொண்டு நடத்திய இவர்களை பற்றி எனக்கு தெரியாதா? வெள்ளை வேன்களை கொண்டு ஆட்கடத்தியதை கடத்தியவன் மறந்தாலும், கடத்தப்பட்டவன் மறந்தாலும், நான் மறக்கவில்லை. அந்த குழுக்கள்தான் பிற்காலத்தில் இன்றுவரை எனது தேர்தல் மாவட்டமான கொழும்பில் பாதாள கோஷ்டிகளாக ஆதிக்கம் செலுத்துகின்றன. சமீபத்தில் கூட வட கொழும்பு மட்டக்குளியில் இரண்டு குழுக்கள் சுட்டுக்கொண்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு பாதாள கோஷ்டி தலைவனை பழிவாங்க அவரது தாயையே, இன்னொரு கோஷ்டி சுட்டுகொன்ற அவலம் இங்கே நிகழ்ந்துள்ளது.

எனவே இது வடக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அங்கே  அது வடக்கு ஆவா என்றால், இங்கே இது கொழும்பு ஆவா! இந்த ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான். இந்த அடிப்படைகளை ரெஜினோல்ட் குரே அறிய வேண்டும்.

ஆகவே அன்று வடக்கில் அமைக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்ட குழுக்கள் இன்றும் அங்கு செயற்படுகின்றன.  அவை வடக்கின் பாதாள கோஷ்டிகள். இன்று அவை அழித்து ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை ஒழிக்கின்றோம் என்று மாணவர்களை சுட்டுவிட்டு, ஆவா என்று எண்ணித்தான் நள்ளிரவில் கண்மண்  தெரியாமல் சுட்டு விட்டோம் என்றால் அது எடுபடாது. விஷம் வைத்தவர்கள்தான் இன்று அந்த விஷத்தைத் கவனமாக அகற்ற வேண்டும். இது பெரிய வேலையல்ல. இதை இன்று போலிஸ் மாஅதிபர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் செய்ய தொடங்கியுள்ளார் என நினைக்கின்றேன்.

அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. அவை உண்மை. இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? இன்று இராணுவம் வடக்கில் சுற்றுலா விடுதிகளை நடத்துகிறது. மீன்பிடி தொழில் செய்கிறது. தெற்கிலிருந்து தங்கள் ஊர் மீனவ நண்பர்களை கூட்டிவந்து, முல்லைத்தீவு மீனவர்கள் பாரம்பரியமாக தொழிலுக்கு போகும் கடலில் இறக்கி விடுகிறது. விவசாய பண்ணைகளை நடத்துகிறது. சிறு தெருவோர கடைகளை நடத்துகிறது.

இவற்றை முதல்வர் விக்கினேஸ்வரன் மட்டும் சொல்லவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் பலமுறை அழுத்தமாக சொல்லியுள்ளார். இந்த அரசின் அமைச்சரவை அமைச்சரான நானும் பலமுறை சொல்லியுள்ளேன். சிங்கள ஊடகங்களில் பலமுறை இது பற்றி அதிகமாக பேசியுள்ளது நான்தான். இவற்றை நான் பிரமதமருக்கும் கூறியுள்ளேன்.

வடக்கில் இராணுவம் நடத்தும் சுற்றுலா விடுதிகள், உடனடியாக அரசு-தனியார் பங்குடமை நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஒன்றில் வடமாகாண சுற்றுலா அமைச்சிடமோ அல்லது தேசிய சுற்றுலா சபையிடமோ மீளளிக்கப்பட வேண்டும். ஜெனீவா தீர்மானம் தொடர்பான பொறுப்பு கூறல் இயந்திரம் அமைக்கும் குழுவின் ஆரம்ப கூட்டம், அலரி மாளிகையில் நடைபெற்ற போது, இந்த கருத்தை நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும், இணைந்து கூறினோம்.

வடக்கில் இருந்து இராணுவம் முழுதாக வெளியேற வேண்டும் என எவரும் கேட்பதாக நான் நினைக்கவில்லை. இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு. அது நாட்டின் நாலாபுறத்திலும் இருக்கத்தான் வேண்டும். அதை புரிந்துக்கொள்ள முடியாத மடையர்கள் அல்ல, தமிழர்கள். இந்திய மீனவர்களின் ட்றோலர் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு மீனவர்களை காப்பாற்ற கடற்படை அங்கு தேவைதானே. அது கடற்படையின் கடமை. அதை அவர்கள் செய்யட்டும்.

ஆனால், மேலதிகமான இராணுவம் தங்கள் ஊரில் இருந்துக்கொண்டு, படைத்துறைக்கு தொடர்பில்லாத தொழிலை  செய்வதை தாம் விரும்பவில்லை என்றுதான் வடக்கு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் எவரும் விரும்ப மாட்டார்கள். கடற்படை, தங்கள் சொந்தக்காரர்ளை அழைத்து வந்து காலி, மாத்தறை கடலில் மீன்பிடிக்க விட்டால் இங்குள்ள மக்கள் ஒப்புக்கொள்வார்களா?  அனுராதபுரம், பொலநறுவையில் பெருந்தொகை காணிகளை பிடித்து விவசாயம் செய்ய இராணுவம் புறப்பட்டால், அங்குள்ள மக்கள் சும்மா இருப்பார்களா?

இந்த உண்மைகளை வேண்டுமென்றே திரித்து திட்டமிட்டு பலர் இங்கே மாற்றி பேசுகிறார்கள். இப்போது ரெஜினோல்ட் குரேயும் பேசுகிறார். புலிப்பயங்கரவாதிகள் பொதுமக்களின் இடங்களை பிடித்து வைத்திருந்தார்கள். அவற்றைத்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இராணுவமே நேரடியாக பொதுமக்களின் காணிகளை சென்று பிடிக்கவில்லை என ரெஜினோல்ட் கூறுகிறார். புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவித்தாகத்தானே இராணுவம் சொல்கிறது. அப்படியானால் புலிகள் பிடித்து வைத்திருந்த இடங்களை மீண்டும் தமிழ் மக்களிடம் வழங்கி தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிக்கலாமே. தமிழர் காணிகளை பிடிப்பதை விட்டுவிட்டு, இராணுவம்  தமிழர் மனங்களை பிடிக்க முயல வேண்டும். புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? என்னே, மடமை ஐயா உங்கள் கருத்து!

எனவே உண்மையான சகவாழ்வு வேண்டும் என்றால், படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து நம் மத்தியில் முதலில் பேச வேண்டும். பின்னர் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நமது அரசுடன் தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் பேசலாம்.  ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நண்பர் யார் என்று பகுத்தறிய முடியாத, யாரிடம் பேசுவது என்று முடிவு செய்யமுடியாத ஒரு நோய் இருக்கிறது. இதற்கு என்னிடம் மருந்து கிடையாது.

மேற்பூச்சு சகவாழ்வு என்பது ஒரு பம்மாத்து. மேற்பூச்சு சகவாழ்வு அமைச்சர் என்ற பெயர் வரலாற்றில் எனக்கு வேண்டாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த வருடம் இதோ முடிகிறது. அடுத்த வருடம், சகவாழ்வை பொறுத்தவரையில் ஒரு தீர்மானக்கரமான வருடமாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் நான் இங்கே இருக்கப்போவதில்லை.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More