குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போக்குவரத்துக்கு பெரும் சவாலாக காணப்படும் நாலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள பாலத்தினை புனரமைத்து தருமாறு மாணிக்கபுரம் இளவேனில் சனசமூக நிலையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மாணிக்கபுரம் கிராமத்தில் சுமார் 400 வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் மற்றும் கல்வி உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசியத் தேவைகளுக்காக அயற்கிராமங்கள் மற்றும் நகரங்களை நாடிச்செல்ல வேண்டியவர்களாக உள்ளனர்.
இம்மக்கள் போக்குவரத்தின்போது கிராமத்தின் இரு பிரதான பாதைகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் இவ்விரு பாதைகளையும் ஊடறுத்து ஆறு பாய்வதால் மக்களின் போக்குவரத்து என்பது அவ்வப்போது கேள்விக்குறியாகிவருகின்றது. அதிலும் பாடசாலை மாணவர்களின் பிரதான போக்குவரத்து வீதியில் அமைந்துள்ள குறித்த பாலத்தால் மழையற்ற காலங்களில் கூட பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
குறித்த வீதியில் கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் அமைத்த மரப்பாலம் ஒன்று உள்ளது. அது தற்போது மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதனால் கால்நடையாக மட்டுமே பயணிக்க முடியும், ஆனாலும் மாணவர்கள் அவ்வப்போது பாலத்திலிருந்து சறுக்கி விழுந்து விபத்துக்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
மேலும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மூன்றாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டபோதும் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் அது நிர்மாணிக்கப்படாததால் மழைக்காலங்களில் அவ்வீதியூடான போக்குவரத்தும் துண்டிக்கப்படுகின்றது.
இவ்விரு வீதிகளும் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்டது என்ற வகையில் இதனை புனரமைத்து தருமாறு மாணிக்கபுரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளவேனில் சனசமூக நிலையத்தினர் பிரதேசசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக குறித்த பகுதி பொது அமைப்புக்களும் பலமுறை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் இது வரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சனசமூக நிலையத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தொடரும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மாணிக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்பாலத்தினைக்கடந்து பாடசாலைக்கு செல்ல முடியாது வீடுகளில் முடங்குகின்ற நிலை உருவாகும். அப்பெரும் அவலத்தை இவ்வருடமும் குறித்த பகுதி மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்