198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
பிழையான சில பத்திரிகைச் செய்திகளினால்த் தான் எனக்கு உயிராபத்தை விளைவிக்கப் பத்திரிகைகள் காரணகர்த்தாக்கள் ஆகியுள்ளன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் புதிதாக வெளிவரும் நாளிதழ் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,
அரசியல் ரீதியான தலையீடுகளோ அழுத்தங்களோ இல்லாமல் செயற்படும் போதுதான் ஆரோக்கியமான முறையில் பத்திரிகை ஆசிரியர்களால் செயற்பட முடியும். அப்போதுதான் வாசகர்கள் மத்தியில் நம்பகத் தன்மையையும் கட்டியெழுப்ப முடியும்.
நண்பர் வித்யாதரன் பத்திரிகை தர்மம் உணர்ந்தவர். அனுபவம் மிக்கவர். ஆகவே அவர் முன்னிலையில் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவது ஒரு வழியில் பார்த்தால் அவசியமற்றது என்று படும். மறுபக்கம் பார்த்தால் அவர் போன்றவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் இவை பற்றிப் பேசவேண்டும் என்றும் கொள்ளலாம். ஏனென்றால் சூழல் அவர்களை எதிர்மறையாக மாற்றாமல் இருக்க இவ்வாறான உரிமையுடனான கருத்துதவிகள் நன்மை பயப்பன என்று நம்புகின்றேன்.
அதாவது பத்திரிகைகள்உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற நடுநிலை தவறா ஊடகங்களாக அமைதல் மிகவும் அத்தியாவசியம். ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற செய்திகள்உண்மைத்தன்மையை கொண்டிருத்தல் வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அச் செய்திகள் பொதுமக்கள் குழப்பமடையாத வகையிலும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் காழ்ப்புணர்வுகளையுந் தூண்டாத வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் ஏற்றவையாகவும்அமைதல் சிறப்பானது.
குறிப்பாக இளைஞர், யுவதிகள் விடயத்தில் இன்னும் கூடுதலான கவனங்கள் செலுத்தப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும். இளைஞர் யுவதிகளின் தவறான சில நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அச் செய்திகளை முகப்பக்கத்தில் பிரசுரம் செய்வதன் மூலம் எதுவுமறியா அப்பாவி சிறுவர்களும் அச் செய்திகளை வாசித்து அதன் தூண்டல் விளைபேற்றினால் தாமும் தவறுகளை இழைக்க முற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
சரியான விடயங்களைச்“சரி” என ஆமோதிப்பதற்கும் அதே நேரம் சமூகத்திற்கு ஒவ்வாத தவறான விடயங்களை “தவறு” என்று எடுத்துக் காட்டுவதற்கும் பத்திரிகைகள் பின்நிற்கக்கூடாது. பத்திரிகைகள் என்பன வயது வந்தவர்களதும் முதியோர்களினதும் பாடப் புத்தகங்கள் ஆவன.
உலகத்தை அவர்கள் பார்ப்பது ஊடகங்கள் ஊடாகவே. அதனை மனதில் இருத்தி உங்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற செய்திகளின் உண்மைத்தன்மை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ஆராயப்பட வேண்டும்.கட்டுரைகள், துணுக்குகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் விடயங்கள் சரியானவையாக இருக்க வேண்டும்.அச்சுப்பிரதிகள் பிழையின்றி அமைதல் அத்தியாவசியம்.
இவை எல்லாம் நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற விடயங்களாக அமைந்துள்ள போதிலும் இவற்றை முக்கியப் படுத்தி முன்னிலைப்படுத்துவதற்கு வலுவான சில காரணங்கள் உண்டு.
ஏனெனில் மக்கள் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் உண்மையானவை என்று நம்புகின்றார்கள். அச்செய்திகளை எடுத்துக்காட்டாகவும் ஆதாரங்களாகவுஞ் சுட்டிக் காட்ட முற்படுகின்றார்கள். உதாரணத்திற்கு பௌத்த விகாரைகளை உரிய அனுமதியின்றி இராணுவத்தினர் அனுசரணையுடன் பௌத்தர்கள் அற்ற இடங்களில் பௌத்த பிக்குமார் கட்டுவதன் தாற்பரியம் என்ன என்று நான் கேட்டதை வைத்து சிங்கள ஊடகங்கள் பௌத்தர்களை வடமாகாணத்தில் இருந்து வெளியே செல்லுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார் என்று கூற என் நண்பர் சர்வோதயத் தலைவர் கலாநிதி யு.வு.அரியரத்ன அவர்கள் உடனே கடிதம் எழுதி“என்ன விக்னேஸ்! இப்படிக் கூறிவிட்டாய்?” என்று என்னிடம் வினவினார். நான் அவ்வாறு கூறவில்லை என்று அவருக்குத் தெரிவிக்க “உன்மேல் இருந்த பெரு மதிப்பும் எதிர்பார்ப்புந் தெற்கில் சரியத் தொடங்கி விட்டது” என்றார்.
ஆகவே மன எழுச்சிக்காக, உணர்வைத் தூண்டுவதற்காகப் பத்திரிகைகள் உண்மையைத் திரிபு படுத்துவது“பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு மரணவலி”என்று ஆகிவிடும் என்பதை நாம் மறத்தலாகாது.பிழையான சில பத்திரிகைச் செய்திகளினால்த் தான் எனக்கு உயிராபத்தை விளைவிக்கப் பத்திரிகைகள் காரணகர்த்தாக்கள் ஆகியுள்ளன.
எங்களைச் சுண்டெலிகளாக்கி நீங்கள் பூனைகளாக வலம் வரப்பார்ப்பதுஅவ்வளவு நல்லதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
அடுத்து பத்திரிகையில் வருகின்ற மொழிநடைகள்,மொழி வசனங்கள் என்பன நூறு சதவீதம்சரியானவையாக அமைவது ஒரு பத்திரிகையைத்தரமானது எனக் கொள்வதற்கு ஒரு நியமமாக அமையும்.மேலும் மாணவ உள்ளங்களில் உங்கள் மொழிப்பிரயோகமே மேலோங்கி நிற்கும்.
பத்திரிகைகளைப் படிக்கின்ற போது பலரும் தங்களுடைய அவசிய வேலைகளை விட்டு விட்டு அவசரமாகப் படிக்கின்றார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் முதலாம் பக்கத்தில் ஒரு செய்தி அதன் தொடர்ச்சி 12ம் பக்கம் என குறித்துவிட்டு 12ம் பக்கத்தைத் தேடுவதற்கு ஒன்றொன்றாகப் பக்கங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டியிருப்பின் வாசகருக்கு நேரமும் கிடைப்பதில்லை அவருக்குப் பொறுமையும் இருப்பதில்லை. எனவே வாசகர்களின் பொறுமைச் சோதிக்காது பத்திரிகைகள் முறையாகப் பக்கங் கட்ட வேண்டும், முதற் பக்கத் தொடர்ச்சி கடைசிப்பக்கத்தில் இடம்பெறுமானால் மயக்கம் இருக்காது.
எனவே மக்களை, அவர்களின் எண்ணங்களை நல்லவிதத்தில் ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் பத்திரிகையாளர்கள். சமூகத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய பத்திரிகைகள் பல தமது தார்மீகக் கடமைகளை மறந்து “தடுக்கி விழுந்தார் விக்கி தாங்கிப் பிடித்தார் மைத்திரி”என்பன போன்ற செய்திகளை எழுதுகின்றார்கள். இதில் என்ன செய்தி இருக்கின்றது அல்லது என்னத்தைக் கூற வருகின்றார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் விழுவதை இரசிக்கின்றார்களா அல்லது என்மீது அதிமேதகு ஜனாதிபதிக்கு இருக்கின்ற அன்பை வெளிக்காட்ட விழைகின்றார்களா அல்லது விக்கியும் சிங்கள அரசுடன் கைகோர்த்து செயற்படுகிறார் என்று சொல்ல வருகின்றார்களா என்பதை நானறியேன்.
விமர்சனங்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆளாக்கப்படுவது சாதாரணமான விடயம். அந்த விமர்சனங்கள் அவர்களை நெறிப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் அவர்கள்பார்த்துக்கொள்வதற்கும் ஏற்றவையாக அமைதல் வேண்டும். ஆனால் சிலர்தங்கள் பெயர்கள் பத்திரிகைகளில் அடுத்தநாட் பதிப்பில் வரவேண்டும் என்பதற்காக எழுந்துநின்று கையை மடித்து உரத்தக் கத்துகின்றார்கள்.விதண்டாவாதத் திற்காக விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.அவர்களைப் பத்திரிகைகள் தூக்கிப்பிடிக்கின்றன. ஆனால் இவ்வாறான தூக்கிப்பிடிப்பு விமர்சிக்கப்படுபவர்களுக்குப்பா திப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக விமர்சிப்பவர்களே பொது மக்களால் இனம் காணப்பட்டு அருவருப்பு நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்பதே உண்மை.
அவர்களை அந்த அருவருப்பு நிலைக்கு அழைத்துச் செல்பவர்கள் பத்திரகையாளர்களே என்பதை பத்திரகையாளச் சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். சில்லறைகளுக்குச் சிறப்பிடம் கொடுப்பதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். அத்துடன் செய்திகள் வெளியிடும் போது ஆராய்ந்து உண்மை அறிந்து அதைச் செய்ய வேண்டும்.
பத்திரிகைகள் தமது சொந்த கருத்துக்கள், தமது சுய இலாபங்கள்,சுய அரசியல் முன்னெடுப்புக்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து எம்மைத் திட்டுவதை மட்டும் முதன்மைப்படுத்தாது பொது நோக்கம் கொண்ட,மக்கள் நலம் சார்ந்த எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக,சமூக மேம்பாடுகள் தொடர்பாக எழுத முன்வர வேண்டும்.
இளைஞர் யுவதிகளின்எதிர்காலத்தை சுபீட்சம் உள்ளதாக மாற்றுவதற்கு அவர்களின் தற்போதைய கற்றல் நடவடிக்கைகள் எவ்வாறு வலுப்பெற வேண்டும்,சமூகத்தில் முன்னணி நிலையை அடைய கல்வியின் பங்கு என்ன என்பன போன்ற பல நல்ல விடயங்களை எழுத முன்வரவேண்டும்.
இழிவானசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றிற்கு வர்ணப்படங்களுடன் விளக்கங்களும் அளித்து இளம் பிள்ளைகளை உணர்வுத் தூண்டல்களுக்கு உள்ளாக்கி சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தாமல்படித்த பண்பட்ட கௌரவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பத்திரிகைகள் யாவரும் முன்வரவேண்டும். அந்த விதத்தில் “காலைக்கதிர்” பத்திரிகை தனது ஆரம்பப் பதிப்பில் இருந்தே மக்கள் நலம் பேணத் தன்னைத்தயார் செய்துகொள்ள வேண்டும்.
விரும்பினால் என்னைத்திட்டுங்கள்ஆனால் உங்கள் திட்டுக்கள் எமது அரசியல் முன்னெடுப்புக்களைப்புடம்போடுபவையாக அமைய வேண்டும். என மேலும் தெரிவித்தார்.
இரட்டை நகர் ஒப்பந்தம். மனம் திறந்தார் விக்கி
பிரதம மந்திரியின் ஒப்புதலின் பேரிலேயே இரட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனவும், ஜனாதிபதியின் அனுமதியுடன் தான் வெளி நாடு சென்றேன் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
யாழில் புதிதாக வெளிவரும் நாளிதழ் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் , பிரதம மந்திரியின் ஒப்புதலின் பேரிலேயே இரட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை மேலும் ஒருதரம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இரட்டை நகர ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 30.03.2016 இல் யாழ் மாவட்டச் செயலர் திரு. வேதநாயகன் அவர்களால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அவை தொடர்பாக 05 அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டதுடன் ஒக்டோபர் மாதத்தில் லண்டனில் நடைபெறவிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கூட்டங்களில், பரிசீலிப்பதற்கு, விவாதிப்பதற்கு குறிப்பிட்ட அமைச்சுக்களிடமிருந்துவிபரங்கள் கோரப்பட்டிருந்தன. அவை எமக்குத் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது பிரயாணம் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, முறையாக அறிவித்து அனுமதிகளைப் பெற்று அதன் அடிப்படையிலேயே எனது பிரயாணம் அமைந்தது.
ஆளுநருக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தான் அனுமதி வழங்கியமையைத் தெரிவிக்கத் தவறவில்லை. ஆகவே நடந்தவற்றைக் கேட்டறியாமல் செய்திகளை வெறும் காது வழிக் கேட்பை வைத்துப் பிரசுரிப்பது பத்திரிகைகளில் பிழையான செய்திகளை மக்களிடையே வளர்க்க உதவுகின்றது. இது அரசியல் ரீதியாகப் பிழையில்லை என்று சில பத்திரிகைகள் நினைக்கின்றன. ஆனால் சமூக ரீதியாகவும் மனித உரிமைகள் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தப்பான செய்திகளைப் பிரசுரிப்பது தவறே.
எமது தற்போதைய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு தமக்குச் சார்பான செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட முண்டியடிக்கின்றார்கள். அந்தப் பலவீனங்களைப் பத்திரிகைகள் பாவிக்கின்றன.
செய்திகளின் உண்மைத்தன்மையை உணர்வதற்கோ அல்லது ஆராய்வதற்கோ தவறிவிட்டு குறித்த அரசியல் வாதிகளின் நன்மதிப்பைப் பெறவே விழைகின்றார்கள். இதனால் தவறான செய்திகள் பரப்பப்படுவதுடன் தொடர் விளைவுகள்கடுமையானவையாக அமைந்துவிடுகின்ற தன்மை பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளன.
எனவேதான் செய்திகள் தொடர்பில் முழுமையான நடுநிலை பேணப்பட வேண்டும் உண்மை கண்டறியப்பட்டு பிரசுரிக்கப்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றேன்.
எமது ஐரோப்பிய பயணம் பற்றியும் முடிக்குரிய கிங்ஸ்ரென் உள்ள+ராட்சிச் சபையுடன் யாழ் மாவட்டம் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவும் சில விடயங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும், எனக் கருதுகின்றேன்.
ஐரோப்பிய முடிக்குரிய கிங்ஸ்ரென் உள்ள+ராட்சிச் சபையும் யாழ் மாவட்டமும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்
1. கல்வி
2. சுகாதாரம்
3. பொருளாதார அபிவிருத்தி
4. கலாச்சார அலுவல்கள்
5. நிர்வாக அல்லது ஆளுகை சம்பந்தமான விடயங்கள்
பற்றி பரஸ்பரம் தமது அறிவுகள், அனுபவங்கள், பொருளாதார உதவிகள் போன்றவற்றைப்பகிர்ந்துகொள்வதே குறிக்கோளாக அமைந்தது.
எமது பயணத்தின் போது வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில்காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக எவ்வகையான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள், மக்கள் எவ்வாறு சுதந்திரமான நாட்டுப்பற்றுள்ள ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்,ஏனைய மக்களுக்கு உதவுவதில் அவர்களின் பரோபகாரத்தன்மை எவ்வாறு நிலவுகின்றது என்பதை எல்லாம் எமது பயணத்தின் போது நாம் அறிந்துகொண்டோம்.
இங்கிருந்து பலவருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு நல்ல நிலைமைகளில் வாழ்க்கை நடாத்துவதுடன் அரசியல் பிரவேசங்களிலும் கணிசமானவர்கள் ஈடுபட்டு சிறப்பாக இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.இந்த இலத்திரனியல் யுகத்தில் எமது வடபகுதியில் நடைபெறும் நிகழ்வுகள்அனைத்தைப் பற்றியும்தெட்டத்தெளிவாக அவர்கள் அறிந்து வைத்திருப்பதையும் எமது முன்னேற்றகரமான செயற்பாடுகள் அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தமையையும் நாம் அவதானிக்க முடிந்தது.
நான் இங்கு ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு வீடு வந்து சேர்வதற்கிடையில் அவர்கள் அக்கூட்டம் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து படங்களையும் பார்த்து வைத்திருக்கின்றார்கள்.
எமது ஒப்பந்தங்கள் கைச்சாத்தான பின்னர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக முன்னணி வகிக்கின்ற புநரெiநெ ளுழடரவழைளெ என்ற ஓர் நிறுவனத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே கழிக்கப்பட்ட மின், இலத்திரனியல் உபகரணங்களில் இருந்து பெறக்கூடிய பெறுமதி மிக்க பகுதிகள் எவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு விடப்படுகின்றது என்பதை செயல்முறை ரீதியாக அறிந்து கொண்டோம்.
அதே போன்று சுகாதாரம் தொடர்பாக கிங்ஸ்ரென் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள வைத்தியர்கள், மருத்துவத்துறையினர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகளை நடாத்திய போது அங்குள்ள வைத்தியர்கள் சுழற்சி முறையில் இங்கு வந்து மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அதே நேரத்தில் தமது வைத்திய நிலையங்களில் காணப்படும் மேலதிக உபகரணங்களை எமக்கு வழங்குவதற்குந் தமது விருப்பைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் கிங்ஸ்ரென் வாழ் தமிழ் முதலீட்டாளர்கள்இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆர்வமாக உள்ளதை அறிந்து கொண்டோம்.
அத்துடன் கிங்ஸ்டன்பல்கலைக்கழகத்திற்குஞ் சென்றிருந்தோம். அவர்கள் எம்மை அன்புடன் வரவேற்றது மட்டுமன்றி கல்வி தொடர்பான பல விடயங்களில் எமக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.
பரஸ்பரம் இரு நகரங்களுக்கும் இடையே சமூக,பொருளாதார,கல்வி மேம்பாட்டு விடயங்களை பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையிலேயே எமது ஒப்பந்தங்கள் அமைந்த போதும் பொருளாதார ரீதியாக நாம் மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கின்ற காரணத்தினால் கலாச்சார மேம்பாடுகள் தொடர்பாக எம்மிடையே வழக்கில் இருக்கும் கலை கலாச்சார விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எமது விருப்பையும் ஒப்புதலையும் தெரிவித்திருந்தோம். அதை அவர்கள் வரவேற்றார்கள்.
பன்னிரண்டாயிரம் தமிழ்க் குடும்பங்கள் இவற்றைப் பார்க்க, கேட்க ஆவலாய் இருப்பதாகக் கூறினார்கள்.
அதே நேரம் பொருளாதார முதலீடுகள் கிங்ஸ்ரென் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை வெளியிட நாம் தவறவில்லை. கிங்ஸ்ரென் நகரத்தில் இரண்டாவது நிலையில் கொரிய இனமக்களே 23மூசதவிகிதம் வாழ்கின்ற போதும் தமிழ் மொழிக்கு ஆங்கிலத்தின் பின்னர் இரண்டாம்தர அந்தஸ்து அங்கு வழங்கப்பட்டிருப்பது எமது மொழியின் சிறப்பையும் எம்மவர்களின் திறமைகளை எடுத்துக்காட்டுவதற்குஞ்சான்றாக அமைந்திருக்கின்றன.
எமது வெளிநாட்டுப் பயணங்களின் போது பலர் எம்மிடம் வடபகுதி அபிவிருத்திகள் தொடர்பாக வினவினர். பல உதவிகளை தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாக இணைந்தும் வழங்குவதாக தெரிவித்தனர்.இவை அனைத்தும் ஓர் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்டுதிட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது அவா.
உதவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய அளவுகளில் மேற்கொள்வது உடனடித் தேவையை நிறைவு செய்வதாகவே அமைவன. திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் நீண்டகால அடிப்படையில் எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஈடுகொடுப்பனவையாகவும்அமைவன.
முதலில் எங்கள் ஆதார அடிப்படைக் கட்டமைப்புக்கள் பலம் வாய்ந்தவையாக உள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டும். நீர், மின்சாரம், வடிகால் வசதிகள் இவற்றுள் முக்கியமானவை. எமது பகுதிகளில் நிலத்தடி நீர் வளங்களைப் பொறுத்தேஅபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பெரிய குளங்களோ ஆறுகளோ எமது பகுதிகளில் இல்லை. இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங்களை பேராசையின் நிமித்தம் முன்னெடு;க்க முனைவது இருப்பதையும் அழிப்பதாக ஏற்பட்டுவிடும். அதனால் தான் நாம் சிறிய மத்திய தர அபிவிருத்திகளைக்கூடுதலாக நடைமுறைப்படுத்த விரும்புகின்றோம்.“பாரிய ஆலைகளை ஆக்குங்கள்.
ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுங்கள்” என்று ஆரவாஞ் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நிலையில் எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்குப் புறம்பாக எமது மக்களின் எதிர்கால வாழ்வு நிலைபேறு கொண்டதாகவும் சுபீட்சமானதாகவும் அமைவதற்கு நாம் பல திட்டங்களை புவியியல், விஞ்ஞான, பொருளாதார அறிஞர்கள் குழாம்;களுடன்இணைந்து வரைய வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு உள்ளது.
ஒவ்வொருவருந் தமது தனித்துவங்களையும் வித்துவத்தையும் உள்நுழைத்து நாம் முன்னெடுக்க இருக்கின்ற திட்டங்களைக் குளப்புவதற்கு பதிலாக ஒன்றிணைந்து எம்மை என்ன காரணத்திற்காக மக்கள்எமது கதிரைகளில் அமோக வெற்றியுடன் அமர வைத்தார்களோ அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறக்கூடிய வகையில் எமது எதிர்காலத் திட்டங்களைத் தயாரிக்க உதவி தர வேண்;டும்.
ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதற்கும்,பத்திரிகைகளில் தம்மைப் பற்றிச் செய்திகளை வெளியிடுவதற்கும் விரயம் செய்கின்ற பெறுமதியான நேரங்களை இவ்வாறான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து பெறுமதியான கருத்துக்களை வழங்குவதற்கு எமது அரசியலாளர்கள் பயன்படுத்துவதுசிறப்புடையது. மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. – சி.வி.
பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை. பல்லாயிரம் மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
யாழில் புதிதாக வெளிவரும் நாளிதழ் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,
சம்பந்தன் அவர்கள் இங்கிருப்பதால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன். என்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில்த்தான் இப்பொழுதும் இருக்கின்றேன்.
எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை. பல்லாயிரம் மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அது கொள்கை ரீதியானது. ஒரு அமைப்பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து. ஆகவே முரண்பாடுகள் இருப்பதால்த்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து.
சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு. தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அம் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும். எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன். என மேலும் தெரிவித்தார்.
Spread the love