அங்கவீனமுற்ற படைவீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற படையினரின் பிரதிநிதிகளுடன் இன்று (07) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் இத்தீர்மானம் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு அறிவித்துள்ளது.
12 ஆண்டு சேவைக்காலத்தை நிறைவு செய்த ஓய்வுபெற்ற படையினருக்கு வழங்கப்படும் சேவை ஓய்வூதியத்தை 12 ஆண்டுகளை நிறைவு செய்யாது சுயவிருப்பின் பேரில் இழப்பீடு பெற்று ஓய்வுபெற்ற படையினருக்கும் வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரைகாலமும் 55 வயதின் பின்னர் அங்கவீனமுற்ற படையினருக்கு இயலாமைக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை எனவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அனைத்து அங்கவீனமுற்ற படையினருக்கும் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தமது அடிப்படைச் சம்பளம் மற்றும் இயலாமைக்கான ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வரும் 3 ஊனமுற்ற படைவீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Nov 6, 2016 @ 06:31
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மூன்று ஊனமுற்ற படைவீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஊனமுற்ற படைவீரர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மூன்று படைவீரர்களே இவ்வாறு நோய் வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கட்புலனற்றவர் எனவும் கண்ணில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய இரண்டு படைவீரர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முதல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.