272
இலங்கையை அந்நியர்கள் கைப்பற்றிய போது கரையோரங்களைத்தான் முதலில் கைப்பற்றினர். அதன் ஊடாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு மையத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களைப் கைப்பற்றினார்கள். அத்துடன் எல்லை ஓரங்களிலேயே தமது அடையாளங்களையும் நிலை நிறுத்தினர். இவ்வாறான நிலை ஒன்றையே இன்று ஈழமும் எதிர் கொள்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லை ஓரங்களை கைப்பற்றும் முயற்சியில் பெரும்பான்மையினர் ஈடுபடுகின்றனர். அத்துடன் அங்கு தமது அடையாளங்களை நிலைநிறுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
இழக்கப்படும் கொக்கிளாய்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமான கொக்கிளாயில் 1984இல் தமிழ் மக்கள் இன அழிப்பு கலவரம் ஊடாக துரத்தப்பட்ட நிகழ்வும் இவ்வாறானதொரு நடவடிக்கையே. இதன் காரணமாக தமிழர்களுக்குச் சொந்தமான இரண்டாயிரத்து 149 ஏக்கர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொக்கிளாயில் மிகப் பெறுமதி மிக்க விவசாய நிலம், மீன்பிடி முகத்துவாரம் என்பவற்றை தமிழ் மக்கள் இழந்துள்ளனர். குறித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தை மையப்படுத்தியே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கு சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுவி அந்த மண்ணின் வரலாற்றையே மாற்றி எழுதும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
இப்போது நிலத்தை இழந்த கொக்கிளாய் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். தொடர்ந்து நில அபகரிப்பு இடம்பெறும் நிலையில் இது தொடர்ந்தும் நிலத்தை அபகரிக்கும் ஒரு ஊக்குவிப்பதாக அமையப் போகின்றது. இதனால் நிலத்தை அடிப்படையாக கொண்ட வாழ்வு பாதிக்கப்படும். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தின் வரலாறு, பூர்வீகம், வாழ்வியல் பண்பாடு என்பன கேள்விக்கு உள்ளாகும். நிலத்தை இழந்த மக்களுக்கு மீண்டும் நிலத்தை வழங்குவதே உரிய நடவடிக்கையாகும். அத்துடன் குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கலாம்.
மக்கள் வெளியேறும் ஒதியமலை
மற்றுமொரு கரையோர கிராமமான ஒதிய மலையிலிருந்து அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். 1984இல் ஒதியமலைப் படுகொலை நிகழ்த்தப்பட்டு அந்த மக்கள் தமது கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஒதியமலைக் கிராமத்தை அண்டியும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் படுகின்றன. ஒதியமலை எல்லையை அண்டிய பகுதியில் சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டனர். தற்போது அடிப்படைவசதிகளை செய்து கொடுக்காமல் அந்த மக்கள் தாமாகவே வெளியேறும் ஒரு பனிப் போர் ஒன்று நடைபெறுகிறது.
இடம்பெயர முன்னர் 110 குடும்பங்கள் வசித்த கிராமத்தில் இன்று வெறும் 50 குடும்பங்களே வசித்து வருகிறார்கள். 1982இல் 150 மாணவர்களுடன் இயங்கிய பாடசாலையில் இன்றைக்கு வெறும் ஐந்து மாணவர்களே கல்வி பயில்கின்றனர். பழைமை மிகுந்த ஒதியமலைப் பாடசாலையில் கற்றலுக்குரிய வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனைப்போலவே அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறுகின்றனர்.
பாடசாலை அதிபர் பாடசாலை மாறும் மாணவர்களுக்கு கடிதத்தை கொடுக்கிறார். கிராம சேவகரோ கிராமம் மாறும் மக்களுக்கு இடமாற்ற கடிததத்தை கொடுக்கிறார். இன்னும் வெகு காலத்தில் ஒதியமலை மக்களற்ற கிராமமாக மாறிவிடுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதற்கு அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனரா என கிராம மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதேவேளை ஒதியமலையிலிருந்து வெறும் ஒன்றரை கிலோமீற்றரில் உள்ள சிங்கள குடியேற்றக் கிராமங்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஒதியமலையில் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள் என்பதனாலா அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன? ஒதியமலையை விட்டு மக்கள் வெளியேற அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனாலா அங்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன? ஏற்கனவே நிகழ்ந்த நில அபகரிப்புக்களின் விளைவுகள் பாரிய பிரச்சினைகளை உருவாக்கி வரும் நிலையில் தொடர்ந்தும் மக்களின் நிலங்களை அபகரிக்கும் புதிய புதிய உபாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வறிய பின்தங்கிய மாவட்டங்களில் நில அபகரிப்புக்கள்
நாம் வறிய மாவட்டங்களில் கடமையாற்ற தயங்குகிறோம். வறிய மாவட்டங்களில் பின்தங்கிய மாவட்டங்களில் குடி வாழ தயங்குகிறோம். ஆனால் வறிய மாவட்டங்களை மையப்படுத்தியே சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. பின்தங்கிய இடங்களை மையப்படுத்தியே சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. எந்தவிதமான எதிர்ப்புக்களின்றிக் குடியேறவே வறிய, பின்தங்கிய மாவட்டங்களை அபகரிப்பாளர்கள் நாடுகின்றனர். அங்குதான் வளங்களும் மிகுந்து காணப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறுகின்றன.
வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா முதலிய மாவட்டங்களின் பின்தங்கிய, வறிய பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எதிர்ப்புக்களின்றி இடம்பெறுகின்றன. அத்துடன் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை முதலிய மாவட்டங்களின் பின்தங்கிய பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர் தாயகத்திற்கு மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் இந்த குடியேற்றங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக திட்டமிட்ட வகையில் இடம்பெறுகின்றது. இனவன்முறை காரணமாக கரையோரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் அக் காணிக்குரிய ஆவணங்களையும் சிங்கள மக்களின் பெயருக்கு அரசால் மாற்றப்பட்டுள்ளது.
எதுவுமில்லை! இராணுவமுகாம் மட்டும் உண்டு!!
வடக்கு கிழக்கில் சில கிராமங்களில் எதுவும் இல்லை. ஆனால் இராணுவமுகாம் மாத்திரம் உள்ளது. சில கிராமங்களில் அரச அலுவலங்கள் இல்லை. ஆனால் இராணுவ முகாங்கள் உள்ளன. சில கிராமங்களில் வைத்தியசாலைகள் இல்லை ஆனால் இராணுவமுகாங்கள் உள்ளன. வடகிழக்கின் சில பகுதிகளில் மக்கள் இல்லை. ஆனால் இராணுவமுகாங்கள் மாத்திரம் உள்ளன. அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்காமல் மக்கள் வெளியேறும் கிராமங்களில் இராணுவ முகாங்களை மாத்திரம் வைத்திருப்பது எதற்கானது? பல கிராமங்களின் முதலில் இராணுவ முகாம், பின்னர் சிங்களக் குடியேற்றம் என்ற நிலமையும் காணப்படுகிறது. அண்மையில் புல்மோட்டை வழியாக சென்றபோது அங்குள்ள பாரிய இராணுவமுகாமின் முன்பாக சிங்களக் குடியேற்றத்திற்காக வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.
கரையோரங்களில் இராணுவமுகாங்கள்
இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று இலங்கையை கைப்பற்ற வெளிநாட்டு அந்நியர்கள் எல்லையோரங்களைக் கைப்பற்றியதுபோன்றே இப்போது வடகிழக்கிற்கு அந்நியர்களான சிங்கள இராணுவம் வடகிழக்கின் எல்லையோரங்கள் முழுவதையும் கைப்பற்றி படைமுகாங்களை அமைத்துள்ளன. அத்துடன் பல கரையோரப் பிரதேசங்கள் இராணுவக் குடியிருப்புக்களாகவும் இராணுவத்தின் ஆளுகைக்கு கீழ் உள்ளன. இந்த இராணுவ ஆக்கிரமிப்பு சிங்கள மயமாக்கலுக்கானது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
இதன் காரணமாக குறிப்பாக கரையோர மக்களின் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரின் ஆதிக்கம் அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கின்றது. ஒரு காலத்தில் அதாவது 2009க்கு முன்னரான காலத்தில் சிங்கள இராணுவப் படைகளிடமிருந்து கடற்தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழீழ கடற்புலிகள் செயற்பட்டனர். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்போது சுதந்திரமாக, எந்த தடையுமின்றி தொழிலில் ஈடுபட்ட காலம் அதுவே.
எல்லையோர அபகரிப்பின் விளைவுகள்
ஏற்கனவே எல்லையோரத்தின் அபகரிப்பும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் வடகிழக்கு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வடகிழக்கின் தமிழ் குடிசனயடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் உறுப்பினர்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான திட்டமிட்ட சூழ்ச்சியை உருவாக்கவும் தமிழர்களின் தாயகத்தை சுருக்கி அவர்களை முற்றாக அழிக்கவுமே கரையோரங்களிலும் எல்லைகளிலும் திட்டமிட்ட குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் முல்லைத்தீவு வழியாக திருகோணமலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அம்பாந்தோட்டையிலிருந்து திருமலை எல்லையில் ஒரு குடியேறிய சிங்களக் குடும்பம் ஒன்று தெருவோரமாக சோழன் கடை நடத்திக்கொண்டிருந்தது. காணிகளை துப்பரவு செய்து விவசாயத்திற்கு தயராகின்றனர். வீடு, பணம் எல்லாம் கொடுக்கப்பட்டு தாம் குடியேற்றப்பட்டதாக அப் பெண் கூறினார். இப்படிப் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர். இன்னமும் குடியேற்றப்படுகின்றனர். அம்பாந்தோட்டையிலிருந்து பல மாவட்டங்கள் தாண்டி, பல நகரங்கள் தாண்டி சிங்களவர் வந்து குடியேறுகின்றனர். ஆனால் தமிழர்களோ வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேறுகின்றனர். இப் பிரதேசங்களில் குடி வாழவும் பணியாற்றவும் தயங்குகிறோம். பூர்வீக தாயகப் பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகள் போல பார்த்துக்கொண்டு செல்கிறோம்.
முல்லைத்தீவு வழியாக திருகோணமலை செல்லும் எவரும் சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றத்தின் கொடூரத்தை உணர்வார். வழிநெடு தென்படும் குடியேற்றங்களும் பெயர்மாற்றங்களும் அழிந்துபோன தமிழர் வாழ்வின் அடையாளங்களும் பெரும் சினத்தை ஏற்படுத்தும். சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழர்கள் போராடினார்கள். ஆனால் சிங்கள அரசோ குடியேற்றங்கள் மூலமே தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் அரசியல் உரிமையை மறுக்கவும் முடிவெடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை உணர முடியும். இந்தக் குடியேற்றங்களின் நுட்பமான தன்மைகளை புரிந்து கொண்டு இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும். திட்டமிட்டு குடியேற்றப்பட்டவர்களுக்கு தமிழர் தாயகத்திற்கு வெளியில் மாற்றுக் காணிகள் வழங்கப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்களின் பிரநிதிகளும் அரச அதிகாரிகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love