இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் மாத்திரமன்றி அதற்கு அருகிலுள்ள காணியையும் தேரர்கள் கோரியிருப்பதாகவும் தான் அறிந்துள்ளதாகவும் இதற்குப் பின்னால் நல்லாட்சியின் முக்கிய அமைச்சரொருவர் இருப்பதாக கூறப்படுவதாகவும் அவ்வாறாயின் அந்த அமைச்சர் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முயலும் சக்திகளுக்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் பூர்விக இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் யுத்தததால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் போது புதிய குடியேற்றங்களையும் இராணுவ முகாம்களையுமே அவர்களுக்கு காண முடிந்ததெனவும் தெரிவித்த அவர் இந்த நிலைமையை மாற்றியமைக்கவே சிறுபான்மை மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் நல்லாட்சி அரசுக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பாத பல விடயங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன எனவும் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் நல்லாட்சியின் பெயரை மங்கச் செய்வதற்கான பல விடயங்கள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அதனை விரும்பாத சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது எனவும் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.