குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஓமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஓமானில் இலங்கை வீட்டுப் பணிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் எவ்வாறு ஓமானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கின்றார்கள் என்பது குறித்து உயர்மட்ட அரசாங்க விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஓமானுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் மீள இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஓமான் அரசாங்கத்துடன் இணைந்து இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.