குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காவல்துறையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் கொலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் கிரமமாக்கப்பட வேண்டுமெனவும் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் ஊடாக காவல்துறையினரின் அதிகாரம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஆபத்தானதாக அமையும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டங்களை நடத்தாமல் இருந்திருந்தால், அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அதிகாரிகள் மூடிமறைக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் அதிகளவில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அதற்கு எதிராக அரசாங்கத் தரப்பு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2014ம் ஆண்டில் கொழும்பு கண்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதனை ஒப்புக்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.