குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் கடத்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பிலான சம்பவங்களை மட்டுமே அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த போது இது குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாற்பது ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டோ அல்லது கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோ உள்ளதாகவும் இதில் இரண்டு பேர் தமிழர்கள் அல்லாதவர்கள் எனவும் அவர்கள் பற்றிய விசாரணைகளை மட்டுமே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிமைகளை அரசாங்கங்கள் பயங்கரவாதமாகவும் இனவாதமாகவுமே நோக்குகின்றன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.