229
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் , ஆயுத குழுவாகவோ, துணைக்குழுவாகவோ, புலிகளை கொல்லும் அமைப்பாகவோ செயற்படவில்லை என அக் கட்சியின் செயலாளரும் , யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இந்தியா புலிகளை அழிக்க ஆயுதம் வழங்கியது.
இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆயுதங்களை மாற்று இயக்கங்களுக்கு வழங்கி இருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எப். , ரெலோ , புளெட் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புக்களுக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கி இருந்தன. அக் கால பகுதியில் ஈ.பி.டி,பி. அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டில் இருக்கவில்லை. நாம் மீண்டும் நாட்டுக்கு திரும்பிய வேளை எம்மை புலிகள் கொல்ல தொடங்கினார்கள்.
எமக்கு இலங்கை அரசாங்கம் ஆயுதம் தந்தது.
அதனால் நாம் பாதுகாப்பு கோரி அரசாங்கத்திடம் சென்றோம். அவ்வேளை எமக்கு ஆயுதங்கள் தந்தும் பொலிஸ் பாதுகாப்பும் அரசாங்கம் தந்தது. அரசாங்கம் ஆயுதம் தரும் போது எமக்கு மாத்திரம் ஆயுதம் தரவில்லை. மாவை சேனாதிராஜா , ரவிராஜ் , சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கும் ஆயுதம் கொடுத்தது. அவர்கள் பாதுகாப்புக்கு என.
எமக்கு ஆயுதங்களை தந்தவர்கள் பிரேமதாசா மற்றும் சந்திரிக்கா அரசாங்கம். அவ்வாறு எமக்கு வழங்கபப்ட்ட ஆயுதங்களை நாம் மீண்டும் 2002ம் ஆண்டு மீள ஒப்படைத்து விட்டோம்.
ஈ.பி.டி.பி சமூக விரோத செயலில் ஈடுபடவில்லை.
ஆயுதங்களை காட்டி கப்பம் பெறுதல், கடத்தல், கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈ.பி.டி.பி, எக்காலத்திலும் ஈடுபடவில்லை. இந்திய அமைதிப்படையின் காலத்தில் அமைதிப்படையுடன் சேர்ந்து கப்பம் பெறுதல், கடத்தல், கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
ஈ.பி.டி.பி. மீதான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன் வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கள் ஆகும்.
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட பல பிரமுகர்களின் கொலையுடன் ஈ.பி.டி.பி. க்கு தொடர்பு உண்டு என கூறினார்கள் பின்னர் விசாரணைகளின் மூலம் அந்த கொலைகளுக்கும் ஈ.பி.டி.பி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தது.
எமது கட்சியை சேர்ந்தவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தால் அவர்களை நாம் உடனேயே கட்சியை விட்டு நீக்கி உள்ளோம்.
சந்திரிக்கா அரசு கொண்டுவந்த தீர்மானம் மிக சிறந்த தீர்மானம்.
எந்த ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் 6 மாதங்களுக்குள் சூட்டோடு சூடாக எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அரசாங்கத்திற்கு வேறு பிரச்சனைகள் அழுத்தங்கள் ஏற்பட தொடங்கி விடும். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு அதனை நாம் தவறவிட்டு விட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு நான் சிங்கள அரசு எனவே கூறி வந்தேன். ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்ரீலங்கா அரசு என கூறுகிறேன்.
அதேபோன்று சந்திரிக்கா அரசு கொண்டுவந்த தீர்மானம் மிக சிறந்த தீர்மானம். அதனை நிறைவேற்ற நாம் தவறிவிட்டோம்.
வடமாகான எதிர்க்கட்சி தலைவருக்கும் ஈ.பி.டி.பி. க்கும் இடையில் முரண்பாடு ?
புருஷன் பொண்டாட்டி என்றால் ஆயிரம் சண்டைகள் இருக்கும். ஆனால் எமக்கு வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் உத்தியோக பூர்வமாக எதனையும் அறிவிக்க வில்லை. கடந்த காலத்தில் எமது கட்சியை சேர்ந்த மு.சந்திரகுமார் மற்றும் சி.தவராசா ஆகியோர் வெளிநாடு சென்று இருந்தனர். பின்னர் மீண்டும் வந்து கட்சியில் இணைந்தார்கள். அவர்கள் இருவரும் வெளிநாடு சென்ற போது கட்சி உடைந்து போகவில்லை. அதேபோன்று அவர்கள் மீண்டும் கட்சியில் வந்து இணைந்த போது ஆஹா ஓஹோ என கட்சி வளரவும் இல்லை.
ஒரு புகையிரத பயணத்தில் பலர் ஏறுவார்கள் இறங்குவார்கள். அது தொடர்பில் நாம் எதுவும் சொல்ல முடியாது என மேலும் தெரிவித்தார்.
Spread the love