வடமாகாண சபை அமர்வில் செங்கோலை தூக்க முற்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபையில் சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டது. வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது கடந்த அமர்வில் தான் கூறிய கருத்து தொடர்பில் ஊடகத்தில் வெளியான செய்தியில் தனது சிறப்புரிமை மீறப்பட்டு உள்ளதாக கூறி தனக்கு அது தொடர்பில் கருத்து கூற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தான் அதற்கு அனுமதிக்க மாட்டேன் என கூறினார். அதனை அடுத்து கோபமடைந்த சிவாஜிலிங்கம் சபையின் நடுவே சென்று செங்கோலை தூக்க முயன்றார். அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா , சிவாஜிலிங்கத்தை சமரசபடுத்தி இருக்கைக்கு அனுப்பி வைத்தார். அதன் போது அவைத்தலைவர் சிவாஜிங்கத்தை நோக்கி ‘ உனக்கு என்ன வேணும் ‘ என கேட்டு இருந்தார்.
பின்னர் தான் சபையில் ‘உனக்கு ‘ எனும் வார்த்தையை பாவித்து இருக்க கூடாது. அதற்காக சபையில் மன்னிப்பு கோருகிறேன். அத்துடன் உனக்கு எனும் சொல்லை பதிவேட்டில் இருந்து நீக்குகிறேன் என தெரிவித்தார்.