குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
கடந்த செம்ரெம்பா் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 125 கடைகள் முற்றாக எரிந்து அழிந்திருந்தது. இதில் முழுமையாக 66 கடைகள் முழுமையாகவும், 59 கடைகள் பகுதியளவிலும் எரிந்து அழிந்திருந்தன.
உடனடியாக எரிந்து அழிந்த 22 பழ வியாபார கடைகள் ஒரிரு வாரங்களுக்காக தற்காலிகமாக அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏனைய புடவை, அழகுசாதன வியாபாரம், காலணி வியாபார கடைகளை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சா் வட மாகாண உள்ளுராட்சி நிதியில் இருந்து 11.3 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்திருந்தாா்.
இந்த நிதியைக் கொண்டு அரைநிரந்த கடைகளாக புடவை, அழகுசாதன வியாபாரம், காலணி வியாபார கடைகள் 45 அமைக்கும் பணி மிக வேகமாக முன்னெடுக்ககப்பட்டு இன்று 07-11-2016 செவ்வாய் கிழமை உத்தியோகபூா்வமாக சந்தை வியாபாரிகளிடம் வட மாகாண முதலமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர மீள்குடியேற்ற அமைச்சினால் 74 மில்லியன் ரூபாக்கள் வியாபாரிகளுக்கான நட்டஈடு வழங்குவதற்கும், அமைச்சரவை அனுமதியளித்துள்ளதோடு. உள்ளுராட்சி அமைச்சினால் புதிய நிரந்தர சந்தை கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவும், தீ அணைப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபாக்களும் என மொத்தமாக 324 மில்லியன் ரூபாக்கள் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு கிடைக்கவுள்ளது. இதனை மத்திய அரசின் அமைச்சா்கள் தன்னிடம் உத்தரவாதமாக தெரிவித்துள்ளனா் என முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இங்கு உரையாற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளா் பத்திநாதன் அவா்கள் வட மாகாணத்தில் முதல் முறையாக 11.3 மில்லியன் ரூபா திட்டத்தை மிகமிக குறுகிய காலத்தில் நோ்த்தியாக நிறைவு செய்துள்ள திட்டமாக கிளிநொச்சி பொது சந்தைக்கான இந்த அரை நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டமையே காணப்படுகிறது எனத் தெரிவித்தார். தன்னுடைய கடமை நேரத்திற்கு அப்பால் இரவு பகலாக நின்று பணிகளை மேற்கொண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டாா்
கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், அரியரட்ணம்,பசுபதிபிள்ளை, மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளா் பத்திநாதன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன் சந்தை வா்த்தகா்கள் என பலா் கலந்துகொண்டனா்.