குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விவகாரத்தை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்ல கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் குடியுரிமை வகிக்கும் சிங்கப்பூர் மத்திய வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடம் இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவற்றுக்கு இந்த மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோப் குழுவின் அறிக்கை, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் உள்ளக அறிக்கை ஆகியன சிங்கப்பூர் மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமளவில் இந்த அறிக்கைகள் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி தெளிவூட்டப்பட உள்ளதாகவும் மத்திய வங்கி பிணை முறி விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தப்படுவதனை எதிர்க்கவில்லை என்ற போதிலும் அது காலம் கடத்துவதற்கான ஓர் வழிமுறையாக அமையக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.