குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்; மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் சென்ற இந்தியப் பிரஜைகள் 05 பேரும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்தியா நோக்கி புறப்பட இருந்த போது பேசாலை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் தப்பிச் சென்றிருந்த 07 சந்தேகநபர்களில் 05 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பேசாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தப்பிச் சென்ற இந்திய சிறுநீரக வர்த்தகர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பம்
Nov 9, 2016 @ 06:25
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இந்தியர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பகல் அளவில் மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இந்தியர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த தடுப்பு முகாம் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவர் ஏற்கனவே தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.