குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து ஆளுனர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கின் நிர்வாக விவகாரங்களில் சர்வதேச தலையீடு அவசியம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றதும், அரசியல் நோக்கத்திலானதுமாகும் என மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த கூற்று மக்களின் தேவைக்காக கூறப்படவில்லை எனவும் இது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கூறப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை பெரும்பான்மையானோரின் கருத்தாக கருதி தகவல் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது புதிய நோய் உருவாகியுள்ளதாகவும் என்ன நடந்தாலும் அதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என கோரப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உள்நாட்டு மருத்துவர்கள் விசாரணை நடத்தக்கூடாது எனவும் சர்வதேச மருத்துவர்ளின் உதவி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முதலமைச்சர் கோரியிருந்தார் எனவும் இவ்வாறான கருத்துக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.