குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையர்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இணைகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இலங்கையர்கள் இணையக்கூடிய அபாயம் குறித்து கண்காணிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் சிரியாவில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ளப்பட்டமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வரும் சர்வதேச காவல் துறையின் 85ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளுக்கும் ஒர் பொதுவான நிலைப்பாடு இருக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புவியியல் மற்றும் ஏனைய முரண்பட்ட காரணிகளின் அடிப்படையில் தீவிரவாதம் பற்றி நாடுகளுக்கு இடையில் மாற்றுக் கருத்து நிலவினால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் பலவீனப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாகவும், தற்போது நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.