குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
டொனால்ட் ட்ராம்ப் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி நியூயோர்க்கின் ஜமெய்க்கா எஸ்டெட் என்னும் நகரில் பிறந்தார். ஐந்து சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையாக ட்ராம்ப் பிறந்தார். 1981ம் ஆண்டு ட்ராம்ப்பின் மூத்த சகோதரர் மது பயன்பாடு காரணமாக உயிரிழந்தார்.
ட்ராம்ப் ஜெர்மன் மற்றும் ஸ்கொட்லாந்து பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் மூன்று திருமணங்களின் மூலம் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ராம்ப் என்ற பாரிய வர்த்தக நிறுவனமொன்றின் தவிசாளராகவும் தலைவராகவும் ட்ராம்ப் செயற்பட்டு வருகின்றார். கட்டடங்கள், காரியாலங்கள், கொல்ப் திடல்கள், ஹோட்டல்கள், கசினோ சூதாட்ட மையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை ட்ராம்ப் நிர்மாணித்துள்ளார்.
1968ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளியல் தொடர்பிலான பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்த ட்ராம்ப் 1971ம் ஆண்டு முதல் தனது தந்தை பிரட் ட்ராம்பின் வர்த்தக நடவடிக்கைகளை பொறுப்பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக அவற்றினை பல்கி பெருப்பித்துள்ளார்.
திரைப்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களிலும் ட்ராம்ப் நடித்துள்ளார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் என்.பி.சீ தொலைக்காட்சியின் தி எபிரன்டீஸ் என்ற ரியலிட்டி நிகழ்ச்சியை ட்ராம்ப் தொகுதி வழங்கியதுடன் நிகழ்ச்சி இணைத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். 2016ம் ஆண்டு போர்பஸ் சஞ்சிகையில் உலகின் 324ம் செல்வந்தர் எனவும், அமெரிக்காவின் 156ம் செல்வந்தர் எனவும் பட்டியலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.